ஒரு முறை காந்தியடிகள் ஆசிரமத்திலிருந்த போது ஒரு தாய் மகனுடன் வந்து காந்தியடிகளிடம், “இவனுக்குப் பகவத்கீதையைப் பற்றிக் கூற வேண்டும்” என்று கேட்டார்.
காந்தியடிகள் அங்கே குவியலாகக் கிடந்த செங்கல் கற்களை எடுத்து ஓரிடத்தில் அடுக்கி வைக்கச் சொன்னார்.
அவனும் அப்பட்யே செய்தான்.
மாலை நேரம் வந்தது. இளைஞன், “அய்யா, பகவத் கீதை...” என்று கேட்க, காந்தியடிகள் “நாளை வா. உனக்குச் சொல்கிறேன்” என்றார்.
மறுநாளும் அவன் வந்தான். காந்தியடிகள் அந்த இளைஞனை மீண்டும் செங்கல் குவியலை அடுக்கச் சொன்னார்.
அவனும் செங்கல் குவியலிலுரிந்து செங்கல் கற்களை எடுத்து அடுக்கி வைத்தான். இரவு வந்ததும் வீட்டிற்குச் சென்றான்.
அடுத்த நாளும் எதுவும் பேசாமல் செங்கல் குவியலை எடுத்து அடுக்கி வைத்தான்.
பின்னர் காந்தியடிகளிடம் வந்து, “அய்யா, நான் கேட்ட பகவத் கீதை...” என்று கேட்டான்.
காந்தியடிகள் அமைதியாக, “நான் பகவத்கீதையை உனக்குக் கூறி முடித்து விட்டேன்” என்றார்.
அதிர்ச்சியடைந்த இளைஞன் காந்தியடிகளை ஆச்சர்யமாகப் பார்த்தான்.
உடனே காந்தியடிகள், “தன் கடமையை ஒழுங்காகச் செய்வதும், எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் செய்வதும்தான் கீதையின் சாரம். இது உனக்குப் புரிந்து விட்டது. நீ போகலாம்” என்றார்.