திரு.வி. கல்யாண சுந்தரனார் கடவுள் வழிபாட்டில் அதிக ஈடுபாடுடையவர்.
அவர் ஒரு முறை கடவுள் மறுப்புக் கொள்கையுடைய பெரியார் ஈ. வே. ராமசாமியைச் சந்தித்தார். திரு. வி. க. தான் கொண்டு வந்திருந்த திருநீற்றைப் பெரியாரிடம் கொடுத்தார்.
அதைப் பெற்றுக் கொண்ட பெரியார், அதைத் தன் நெற்றியில் பூசிக் கொண்டார். இதைக் கண்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் திடுக்கிட்டனர். ஆச்சரியப்பட்டனர்.
இருவரும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் திரு. வி. க. விடைபெற்றுச் சென்றார்.
அவர் சென்றவுடன் அவருடனிருந்தவர்கள், “உங்கள் நெற்றியிலிருக்கும் திருநீற்றை அழித்து விடுங்கள்” என்று வற்புறுத்தினார்கள்.
ஆனால் பெரியார் அதற்கு மறுத்து விட்டார்.
பின்னர் அவர்களிடம், “திரு. வி. க. எந்த உணர்வோடு எனக்கு இந்த திருநீற்றைக் கொடுத்தாரோ, அந்த உணர்வை அவமதிக்கக் கூடாது. நான் அதை அழித்து விட்டேன் என்று அவர் கேள்விப்பட்டால், மனம் வருந்துவார். அவர் மனம் வருந்தக் கூடாது என்பதற்காகவே நான் இந்தத் திருநீற்றை என் நெற்றியில் பூசியிருக்கிறேன். அதனால் இதை நான் அழிக்க மாட்டேன். அது தானாக அழியும் போது அழியட்டும். இதுவே நான் திரு. வி. க விற்கு நான் காட்டும் நிறைவான மரியாதை ஆகும்” என்றார்.
இதைக் கேட்டதும் அங்கிருந்தவர்கள் ஒன்றும் பேசவில்லை.
பெரியார், தன்னுடைய கொள்கையில் தீவிரமாக இருந்தாலும், தன் மீது மற்றவர்கள் கொண்டிருக்கும் மதிப்புக்கு மரியாதை அளிப்பவர் என்பதையும் இதன் மூலம் உணரலாம்.