இரவில் தாயின் அருகில் படுத்திருந்த அந்தச் சிறுவனுக்குத் தூக்கம் வரவில்லை.
மெதுவாகப் படுக்கையை விட்டு எழுந்த அந்தச் சிறுவன் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.
வீட்டின் அருகில் குளம் ஒன்று இருந்தது.
அந்தக் குளத்தின் கரையில் போய் அமர்ந்து கொண்ட அந்தச் சிறுவன் அங்கிருந்த சிறு கற்களைத் தண்ணீரில் போட்டு அதிலிருந்து எழும் அலைகளைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருந்தான்.
வீட்டிற்குள் படுத்திருந்த அந்தச் சிறுவனின் தாய், தன்னருகில் தன் மகனைக் காணவில்லை என்றதும் பதறிப் போனார்.
வீட்டின் கதவு திறந்திருப்பது கண்டு பதைபதைப்புடன் வெளியே ஓடி வந்தாள்.
மகன் குளக்கரையில் அமர்ந்திருப்பதைக் கண்டதும் அவளுக்கு நிம்மதி வந்தது.
அவனருகே சென்ற அவள், “மகனே, வீட்டிற்குள் படுத்திருந்த நீ, நள்ளிரவு வேளையில் இப்படி தனியே வந்து அமர்ந்திருக்கலாமா? உனக்குப் பயமாக இல்லையா?” என்று கேட்டாள்.
உடனே அந்தச் சிறுவன், “அம்மா!பயமா? அப்படி என்றால் என்ன அம்மா?” என்று கேட்டான்.
சிறுவனின் கேள்விக்குப் பதில் சொல்லத் தெரியாமல் விழித்தாள் அந்தத் தாய்.
இளம் வயதிலே பயம் என்றால் என்னவென்றே தெரியாமல் வளர்ந்த அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
உலகம் முழுவதையும் வென்று தனக்குக் கீழாகக் கொண்டு வர விரும்பினானே அந்த மாவீரன் நெப்போலியநன்தான் அந்தச் சிறுவன்.