எது பயன்படக்கூடியது?

காந்திஜி லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஒருவரும் அதே கப்பலில் பயணம் செய்தார்.
பயணத்தின் போது காந்திஜியை அவர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு வந்தார் அவர். காந்தியடிகளோ இதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வெறுத்துப் போன ஆசாமி, காந்தியை நக்கலடித்து சில கவிதைகளை எழுதினார். அதை காந்தியிடம் கொடுத்து,"படித்துப் பாருங்கள்" என்றார்.
கவிதைகளைப் படித்து ஆசாமியின் நக்கலைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது குறித்து கவலைப்படவில்லை.
மறுநாள் காலை அந்த ஆசாமி காந்தியடிகளைப் பார்க்க வந்தார். காந்திஜியிடம் ,"என் கவிதைகள் எப்படி? பயனுள்ளதாக இருந்திருக்குமே?" என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே "ஓ..! தாங்கள் கொடுத்த கவிதைகளை ஒன்று விடாமல் படித்தேன். அதில் எனக்குப் பயன்படக்கூடிய அம்சத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்." என்று கூறி அந்தக் காகிதத்தில் குத்தியிருந்த குண்டூசியை எடுத்துக் காட்டினார். நீங்கள் கொடுத்ததில் இதுதான் எனக்குப் பயன்படக் கூடியது."என்றார்.
அந்த ஆங்கிலேயரின் முகத்தில் ஈயாடவில்லை.
- தேனி.எஸ்.மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.