வாடா மருதப்பா...என்றது சரியா?
ஊற்றுமலை ஜமீன்தார் ஹிருதாலயா மருதப்ப பூபதியும், சர்க்கரைப் புலவரும் நெருங்கிய நண்பர்கள்.
ஒரு சமயம் புலவர் உடல்நலமின்றி படுத்த படுக்கையாகக் கிடந்தார்.
பலரும் வந்து அவரைப் பார்த்து உடல் நலம் விசாரித்துச் சென்றனர்.
பல நாளாகியும் வராத ஜமீன்தார், ஒரு நாள் புலவரது உடல்நலம் குறித்து விசாரிக்க நேரில் வந்தார்.
அவருடன் சில முக்கியமானவர்களும் வந்திருந்தனர்.
ஜமீன்தாரைக் கண்ட புலவர், "வாடா மருதப்பா!" என்றார். இதைக் கேட்ட ஜமீன்தாருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது. புலவர் தன்னை ஒருமையில் அழைக்கிறாரே என்ற ஆதங்கம்.
ஆனால் புலவரோ தொடர்ந்து, "வாடினேன் உன்னைக் காணாமல்..." என்றார்.
அப்போதுதான் ஜமீந்தாருக்கு அர்த்தம் விளங்கியது. படுத்த படுக்கையாய் இருக்கும் போதும் புலவரின் சிலேடைப் பேச்சைக் கேட்டு மனம் மகிழ்ந்தார்.
(வாடா- ஒரு போதும் மனம் தளராத, வாடினேன் - உன்னைப் பார்க்காமல் உடல் மெலிந்தேன்)
- சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.