சிரித்தது எதற்காக?
கிரேக்க நாட்டில் மீசோ என்ற அறிஞர் இருந்தார். அவர் உலகத்தோடு ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்ந்து வந்தார்.
அவருக்குப் பிடிக்காத, அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்துக்களை யாராவது பேசினால் அவர் கோபப்பட மாட்டார். சிரிப்பார். சிரித்துச் சிரித்தே அந்தச் சூழ்நிலையை மறப்பார்.
ஒருநாள் அவருடைய மாணவன், “ஐயா! உங்களுடன் யாரேனும் பேசும் போது சில சமயங்களில் நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்?” என்று கேட்டான்.
அதற்கு மீசோ, “அறிவற்ற பேச்சுக்களைக் கேட்கும் விதி எனக்கு நேர்ந்து விட்டதே என்று என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்கிறேன். அவ்வளவுதான்” என்று பதில் தந்தார்.
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.