உலகமே போற்றும் உலக விஞ்ஞானத்தின் தந்தை தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த போது சாதாரணக் குழந்தை போல் இல்லாமல் சற்று வித்தியாசமாக இருந்தாராம்.
இவரது தலையின் அமைப்பு, உடல் அமைப்பு போன்றவைகள் வேறுபட்ட காரணத்தினால் மருத்துவர்கள் இவரைப் பரிசோதித்துப் பார்த்து விட்டு, “எடிசனின் தலை அமைப்பு இயற்கைக்கு மாறுதலாக இருக்கிறது. எனவே இவர் வளர்ந்த பின்பு மனநிலை பாதிக்கப்பட்டு விடுவார்” என்று தெரிவித்தனர்.
அவரது தாய் எடிசனைப் பள்ளியில் சேர்ப்பதற்காகக் கொண்டு சென்றார்.
அங்கிருந்த ஆசிரியர் எடிசனின் தோற்றத்தைப் பார்த்து, “மனிதத் தோற்றமே இல்லாமல் மாறுபட்ட உடல் அமைப்பில் இருக்கும் இவனைப் பள்ளியில் சேர்க்க முடியாது” என்று திருப்பி அனுப்பி விட்டார்.
இதற்காக எடிசனின் தாய் வருத்தப்படவில்லை. தனது மகனுக்குக் கல்வி கற்பித்து எப்படியும் சிறந்தவனாக்கி விடுவது என்று முடிவு செய்தார்.
அவரே தனது மகனுக்கு இரவும் பகலும் பல பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். எடிசனும் விடாமுயற்சியுடன் பல பாடங்களைக் கற்றுக் கொண்டார். பின்னர் கடினமான உழைப்பால் பல கண்டுபிடிப்புகளைக் கண்டறிந்தார்.
அவர், “மனிதன் கடன்பட்டிருப்பது மூளைக்கல்ல... முயற்சிக்கத்தான்! கடவுள் வரங்களை விற்பனை செய்கிறார்.மனித முயற்சிகளே அவற்றின் விலை” என்று பின்னர் குறிப்பிட்டிருக்கிறார்.