மகாத்மா காந்தி சிறுவனாக இருந்த போது இருட்டைக் கண்டால் பயப்படுவார். இருட்டில் பேய், பிசாசுகள் இருக்கும் என்று அஞ்சுவார்.
அவர் வீட்டில் ரம்பா என்ற முதிய தாதிப்பெண் வீட்டு வேலைகளைச் செய்து வந்தார். காந்தி இப்படி இருட்டைக் கண்டு பயப்படுவதை அறிந்த அந்தப் பெண் ராமநாமத்தைக் காந்திக்குச் சொல்லிக் கொடுத்தார். இருட்டில் வரும் போதெல்லாம் இந்த மந்திரத்தைச் சொன்னால் பேய், பிசாசுகள் வராது என்று சொன்னார். இது காந்தியின் மனத்தில் ஆழமாகப் பதிந்து விட்டது. எப்பொழுதும் இந்த மந்திரத்தையே சொல்லத் துவங்கினார். பேய், பிசாசுகள் பயத்திலிருந்து நீங்கினார்.
"இந்த ராம நாமம் எனக்கு மகாசக்தியையும், நெஞ்சுறுதியையும், தன்னம்பிக்கையையும் அளித்துள்ளது" என்று காந்தி எத்தனையோ முறை தெரிவித்துள்ளார்.
கோட்சேயினால் சுடப்பட்டு காந்தி உயிர் பிரியும் முன்பு சொன்ன வார்த்தையும் இந்த ராம நாமம்தான். ஆம். ஹேராம் என்றபடிதான் உயிர் விட்டார்.