பாரதத் தாய் எப்படி இருக்க வேண்டும்?

பாரதியார் அப்போது புதுச்சேரியில் தங்கியிருந்தார். அவரின் மாணவரான பாரதிதாசனும் அவருடன் இருந்தார்.
இருவரும் பேசிக் கொண்டிருந்த பொழுது பாரதியார், “பாரதத் தாய்க்கு ஒரு சிலை செய்ய வேண்டும்” என்ற விருப்பத்தை பாரதிதாசனிடம் கூறினார்.
பாரதிதாசனும் அதற்கு ஒரு சிற்பியை ஏற்பாடு செய்தார். சிலை வடிக்கும் பணி தொடங்கியது.
ஒரு நாள் சிற்பி இருவரையும் தேடி வந்தார்.
“அய்யா, சிலை வடிக்கும் பணியைத் தொடங்கி விட்டேன். எனக்கு ஒரு சந்தேகம். அதைத் தங்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு போகலாமென்று வந்திருக்கிறேன்” என்றார் அந்த சிற்பி.
“என்ன சந்தேகம்?” என்றார் பாரதியார்.
“சிலை ஆடை ஆபரணங்களுடன் இருக்க வேண்டுமா? ஏழையாக எளிமையாக இருக்க வேண்டுமா?” என்று கேட்டார் அந்த சிற்பி.
அருகிலிருந்த பாரதிதாசன், “சிலை, ஏழையாகவும், எளிமையாகவும் இருக்க வேண்டும்” என்றார்.
இதைக் கேட்ட பாரதியாருக்குக் கோபம் வந்தது. வேகமாக எழுந்தார்.
“என் பாரதத்தாய் ஏழையா? என் தாய்க்கு வளங்களும், செல்வங்களும் இல்லையா? இந்தப் பூமியில் தங்கமும், வைரமும், கோதுமையும், நெல்லும் விளைகின்றன. வற்றாத நதிகள் பல ஓடுகின்றன. இங்கு எந்தக் குறை இருக்கிறது? என் பாரதத் தாய் செல்வச் செழிப்புடனும், ஆடை ஆபரணங்களுடனும் விளங்க வேண்டும். அதன்படி சிலையை நல்ல ஆடை, அணிகலன்களுடன் செய்யுங்கள்” என்றார்.
பாரதியார் சொன்னது உண்மைதானே...? என்ன வளம் இல்லை...இந்தப் பாரதத் திருநாட்டில்...!
- தேனி. எஸ். மாரியப்பன்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.