மக்களுக்கான உதவி முழுமையாகப் போகாதது ஏன்?
ஐரோப்பிய நாட்டின் 'பிரடெரிக் தி கிரேட்' என்ற மன்னன் தனது பிரபுக்கள் மற்றும் அமைச்சர்களுக்கு ஒருமுறை பெரிய விருந்து ஒன்று அளித்தான்.
அப்போது அவன், “ஏழைகளுக்கு எவ்வளவோ செய்கிறேன். இருந்தாலும் நாட்டு மக்கள் தங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லை என்று குறையாகக் கூறிக் கொண்டே இருக்கிறார்களே ஏன்?” என்று கேட்டான்.
வயது முதிர்ந்த அமைச்சர் ஒருவர், “நான் இதற்குப் பதில் சொல்கிறேன்” என்று சொன்னார்.
மன்னனும், “உடனே சொல்லுங்கள்” என்றான்.
அந்த அமைச்சர் விருந்தில் தனக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பனிக்கட்டியை எடுத்துப் பக்கத்தில் இருந்தவரிடம் கொடுத்து, “இந்தப் பனிக்கட்டியை அடுத்த பிரபுவிடம் கொடு” என்றார். அவரும் தனக்கு அடுத்து இருந்தவரிடம் அதைக் கொடுத்தார்.
அந்தப் பிரபு, அவருக்கடுத்திருந்தவரிடம் கொடுத்தார். இப்படியே பல பேரின் கைகளில் பயணித்த அந்தப் பனிக்கட்டி கடைசியாக மன்னர் கைக்குப் போய்ச் சேர்ந்தது.
அந்தப் பனிக்கட்டி மன்னரிடம் போன போது, உருகி இரண்டு சொட்டுத் தண்ணீராகத்தான் இருந்தது.
“பனிக்கட்டி இரண்டு சொட்டுத் தண்ணீர்த் துளிகளாக மாறிவிட்டதே?” என்று கேட்டான் அந்த மன்னன்.
“மன்னரே, நீங்கள் ஏழைகளுக்குச் செய்யும் உதவிகளும் இப்படித்தான். பனிக்கட்டியாகப் புறப்பட்டு இடையிலிருப்பவர்களையெல்லாம் கடந்து மக்களுக்குச் சென்று சேரும் போது இரண்டு சொட்டுத் தண்ணீர்த் துளிகளாக மாறிவிடுகின்றன” என்று விளக்கினார் அந்த அமைச்சர்.
- சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.