கற்றுத் தர முடியாதது!

சர்.சி.வி. இராமன் தன்னுடைய ஆய்வகத்திற்கு ஒரு உதவியாளரை நியமிப்பதற்கான நேர்காணலை நடத்தினார்.
அங்கு வந்தவர்களில் ஒருவன் மட்டும் அவருடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறினான்.
சர்.சி.வி. இராமன் அவனிடம், “தம்பி, இந்த வேலைக்கு ஏற்ற வகையில் உன் இயற்பியல் அறிவை வளர்த்துக் கொள். அடுத்த முறையாவது வெற்றி பெறுவாய்” என்று அறிவுறுத்தினார்.
கவலையுடன் அங்கிருந்து கிளம்ப முயன்ற அவன், அங்கு கீழே ஒரு குண்டூசி கிடப்பதைப் பார்த்தான்.
அந்தக் குண்டூசியை எடுத்து, சர்.சி.வி. இராமனின் மேசை மேலிருந்த குண்டூசி டப்பாவில் அதைப் போட்டான்.
இதைக் கவனித்த சர்.சி.வி. இராமன் அவனை அழைத்தார். அவனிடம், “நான் உன்னை வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறேன்” என்றார்.
அந்த இளைஞன், “அய்யா, சிறிது நேரத்திற்கு முன்னால், எனக்கு இயற்பியல் அறிவில்லை என்றீர்களே...” என்றான்.
சர்.சி.வி. இராமன், “இயற்பியலைக் கற்றுத் தரலாம். கற்றுக் கொள்ளலாம். ஆனால், பொறுப்புணர்ச்சியை யாரும் கற்றுத் தர முடியாது. அது இயல்பான ஒன்று. இப்போது உனக்கு வேலை கிடைத்ததற்கும் அந்தப் பொறுப்புணர்ச்சியே காரணம்” என்றார்.
இளைஞன் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
- தேனி.பொன்.கணேஷ்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.