ஒரு முறை சாணக்கியரிடம் ஒருவன் வந்து, “உங்கள் நெருங்கிய நண்பரைப் பற்றி நான் ஒன்று கேள்விப்பட்டேன். உங்களிடம் அதைச் சொல்லவா?” என்று கேட்டான்.
சாணக்கியர் அவனிடம், “நீங்கள் சொல்வதற்கு முன் என் மூன்று கேள்விகளுக்கு விடை சொல்லுங்கள்” என்றார்.
சாணக்கியர் முதலில் அவனிடம், “நீங்கள் என் நண்பரைப் பற்றிக் கூறப்போகும் செய்தி உண்மையானதா?” என்று கேட்டார்.
அதற்கு அவன், “தெரியாது” என்றான்.
அடுத்து சாணக்கியர் அவனிடம், “நீங்கள் என் நண்பரைப் பற்றிய நல்ல விஷயத்தைச் சொல்லப் போகிறீர்களா?” என்றார்.
அதற்கு அவன், “இல்லை” என்றான்.
மூன்றாவதாகச் சாணக்கியர் அவனிடம், “நீங்கள் கூறப்போகும் செய்தியால் எனக்கு ஏதாவது நன்மை இருக்குமா?” என்றார்.
அதற்கும் அவன், “இல்லை” என்றான்.
அதைக் கேட்ட சாணக்கியர், “நீங்கள் சொல்லப்போகும் விஷயம் உண்மையா என்றே உங்களுக்குத் தெரியாது. மேலும், அது நல்ல விஷயம் இல்லை என்று நீங்களே சொல்லுகிறீர்கள். இறுதியாக, அதைக் கேட்பதால் எனக்கும் எந்தப் பயனும் இல்லை என்றும் சொல்கிறீர்கள். அதன் பிறகும், நான் ஏன் அதைக் கேட்க வேண்டும்? நமது பொன்னான நேரத்தை இது போன்ற விசயங்களில் ஏன் வீணாக்க வேண்டும்? நீங்கள் அதைச் சொல்லாமல் இருந்தாலே நலம்” என்றார்.
தேவையற்ற விசயங்களில் கவனம் செலுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையேல், நம் நேரம் வீணாவதுடன் தேவையற்ற குழப்பங்களையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.