ஒருமுறை பெருந்தலைவர் காமராஜரும், எழுத்தாளர் சாவியும் ஊட்டியில் சந்தித்தார்கள். முதலமைச்சராக இருந்த காமராஜர், எழுத்தாளர் சாவியை அருகில் அழைத்து “ஊட்டி ஏரியை சுற்றுலாப் பயணிகள் வந்து தங்கும் வகையில் அழகு படுத்த வேண்டுமாம் அதை என்னை வந்து பார்க்கச் சொல்கிறார்கள். வாருங்கள் படகில் போய் வருவோம்” என்றார்.
படகு சவாரி செய்யும்போதே “ஊட்டினா.. அது பணக்காரர்களுக்கு மட்டும் உரிய இடம் என்ற நிலை இருக்கக்கூடாது. அதை ஏழைகளும் அனுபவிக்க வேண்டும். இந்த ஏரியைச் சுற்றி நிறைய மரங்கள் உள்ளன. இந்த மரங்களுக்கு நடுவே சின்ன காட்டேஜ்கள் கட்டி குறைந்த வாடைக்குக் கொடுக்க வேண்டும். சமையலுக்கு பாத்திரங்கள் கூட அரசாங்கமே கொடுத்திடனும். வாடையாக பத்து ரூபாய்க்கு மேல் வசூலிக்கக்கூடாது.
ஆனால் படு பாவிங்க இங்கே மரத்தைக் கூட வெட்டி விடுகிறார்கள். மரத்தை வெட்டக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. சட்டம் இருந்த என்ன பலன்? கலெக்டரைக் கூப்பிட்டு நல்ல சாப்பாடு போட்டு விட்டால் போதும் ‘வெட்டிக்கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடுவார்கள்" என்று மிகவும் வருத்தத்தோடு காமராஜர் சொல்லிக் கொண்டே போனார்.
படகு போய்க்கொண்டே இருந்தது. சிறிது நேரத்தில் “அதோ அங்கே பாருங்கள் இப்போதுதானே இதைப் பற்றிச் சொன்னேன்” என்றார் காமராஜர்.
அங்கே பார்த்தால்… ஒருபெரிய மரம் வெட்டப்பட்டு சாய்ந்து கிடந்தது. கலெக்டருக்கு நல்ல சாப்பாடு கிடைத்து விட்டதாக நினைத்தாராம் எழுத்தாளர் சாவி.
அரசுப் பணியில் இருப்பவர்கள் லஞ்சம் வாங்கிவிட்டு தகாத செயல்களுக்கு துணை போகக் கூடாது” என்பது காமராஜரின் கொள்கையாகும்.
இப்போதிருக்கும் அதிகாரிகளாவது சிந்திப்பார்களா?