கபீர்தாஸ் ஒரு சமயம் கங்கை நதியில் நீராடச் சென்றிருந்தார். ஆற்றில் நீர் அதிகமாகச் சென்று கொண்டிருந்ததால், அவர் கொண்டு சென்ற சொம்பில் தண்ணீரை எடுத்துக் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த புரோகிதர்கள் மூன்று பேர், “ஒரு சொம்பு இருந்தால் நாமும் நீரை எடுத்துக் குளிக்கலாம். ஆனால் நாம் எவரும் சொம்பு கொண்டு வரவில்லையே” என வருத்தமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.
இதைக் கேட்ட கபீர்தாசர் தன்னிடமிருந்த சொம்பை கங்கைக்கரை மணலால் துலக்கி கங்கை நீரால் கழுவி, அந்தப் புரோகிதர்களிடம் கொடுத்தார்.
ஆனால் அவர்களோ கபீர்தாசரின் நெசவுத்தொழிலைச் சுட்டிக்காட்டி அந்தச் சொம்பை நாங்கள் உபயோகிக்க இயலாது என்றனர்.
கபீர்தாசரோ தான் சொம்பை கங்கைக்கரை மணலாலும் கங்கை நீராலும் சுத்தம் செய்ததைக் கூறித் தமது சொம்பைப் பயன்படுத்தும்படி வேண்டினார்.
புரோகிதர்களோ அவர் சொம்பை மறுபடியும் தொட்டுவிட்டதால் அது அதன் புனிதத்தன்மையை இழந்து விட்டதாகக் கூறினர்.
கபீர்தாசர் புரோகிதர்களின் பேச்சைக் கேட்டு வருத்தப்படாமல், அமைதியாக, “அப்படியானால், நீங்கள் வேறொரு கங்கையை வரவழைத்துத்தான் நீராட வேண்டியிருக்கும்” என்றார்.
இதைக்கேட்ட புரோகிதர்கள் வியப்புடன் “ஏன்?” என்று கேட்டனர்.
கபீர்தாசர், “ஏனெனில், இந்தக் கங்கையில் உங்களுக்கு முன்பாக நான் குளித்து விட்டேன். எனவே இதுவும் புனிதம் கெட்டுப் போயிருக்கலாம் அல்லவா?” என்றார்.
புரோகிதர்கள் வெட்கித் தலை குனிந்தனர்.