மகாராஜாவிற்கு மகாத்மா அறிவுரை!
காசி இந்துப் பல்கலைக்கழகத்தின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மகாத்மா காந்தி. பல்கலைக்கழகம் உருவாக அரும்பாடுபட்ட அன்னிபெசன்ட் அம்மையார், தாராளமாக நிதி அளித்து உதவிய 'தார்பங்கா' மகாராஜா உட்பட முக்கியமானவர்கள் பலரும் அந்த விழாவில் கலந்து கொண்டனர்.
முக்கியமானவர்கள் ஒவ்வொருவராகச் சிறப்புரை ஆற்றினர். கடைசியாகப் பேச எழுந்தார் காந்திஜி. அவர், ''இந்தியாவின் புனித நகரம் காசி. அதை நாம் சுத்தமாக வைத்துக் கொள்கிறோமா? இல்லை! இப்படி இருந்தால் நம் மீது மற்றவர்களுக்கு எப்படி மரியாதை வரும்? நாட்டில் ஏழைகள் பலர் இருக்கின்றனர். ஆனால், மகாராஜாவோ விலை உயர்ந்த பட்டாடைகளை அணிந்து கொண்டு வந்திருக்கிறார். 'இப்படிப்பட்ட ஆடம்பரம் தேவையா?' என்பதை மகாராஜா நினைத்துப் பார்க்க வேண்டும். நான் இப்படியெல்லாம் பேசுவதால், பலரது மனம் புண்படக்கூடும். ஆனால், அதைப் பற்றிக் கவலையில்லை. நமக்கு பேச்சு முக்கியம் அல்ல; செயலும் அதனால் ஏற்படும் விளைவுகளுமே முக்கியம். இதைப் புரிந்து கொண்டு மகாராஜா தனது உடையினை இனியாவது மாற்றிக் கொள்ள வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.
- சித்ரா பலவேசம்.
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.