மகாவித்துவானுக்குப் புரியாத பாடல்
மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஒரு நாள் காவிரிபுராணம் படித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, தெருவில் சென்ற ஒரு துறவி, "அத்தினத்துக்கும் ஓட்டை கைக்கும் ஆயிரம் காதம். ஆனாலும் நடக்குது சேலை வியாபாரம்" என்று பாடிக் கொண்டே சென்றார்.
பண்டிதரான வித்வானுக்கு அந்தப் பாட்டின் பொருள் புரியவில்லை.
துறவியை அழைத்து விளக்கம் கேட்டார்.
"அர்த்தம் சொல்லணுமா சாமி! அஸ்தினாபுரம் என்னும் சொல்லே 'அத்தினம்' என சுருங்கி விட்டது. 'ஓட்டை கை' என்பது துவாரகை. 'துவாரம்' என்பதற்கு 'ஓட்டை' என்றும் பொருளுண்டு. அஸ்தினாபுரம் அரண்மனையில் திரவுபதியின் துயிலை உரித்தபோது, நெடுந்தொலைவில் துவாரகையில் இருந்தாலும், கிருஷ்ணர் சேலையைக் கொடுத்து மானத்தைக் காத்தார். மாயாஜால கண்ணன் அவளுக்குச் சேலை அளித்ததையே சேலை வியாபாரம்" என்று பாடியதாகத் தெரிவித்தார்.
விளக்கம் கேட்ட வித்துவான் வியந்து போனார்.!
- சித்ரா பலவேசம்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.