ஏழ்மையாக இருந்த ஒருவனுக்குப் படிப்பே வரவில்லை, படிப்பை விட்டுவிட்டு வேலை தேடத் தொடங்கினான்.
அவன் எதிர்பார்த்தது போல் அவனுக்கு உடனே வேலை கிடைத்துவிடவில்லை.
அவனுக்குக் கடுமையான பசி, ஒருநாள் ஒரு நாடக அரங்கத்தின் வாசலில் சென்று அமர்ந்து விட்டான்.
அந்த நாடக அரங்கிற்குப் பணக்காரர் ஒருவர் தன் குதிரையில் நாடகம் பார்க்க வந்தார்.
அவர் அந்தப் பையனிடம்,”டேய் தம்பி, இங்கே நான் கட்டிவிட்டுச் செல்லும் என் குதிரைகள் காணாமல் போகின்றன. நீ இதைப் பார்த்துக் கொள். வரும் போது உனக்கு ஏதாவது காசு தருகிறேன்” என்றார்.
அந்த வேலைக்கு அவர் கொடுக்கும் பணத்தில் ஒரு வேளையாவது சாப்பிட்டு விடலாம் என்று நினைத்த அந்தச் சிறுவனும் ஆர்வத்துடன் தலையாட்டினான்.
அந்தப் பணக்காரர் நாடகம் பார்க்கச் சென்றார்.
அந்த நேரத்தில், அவன் அந்தக் குதிரையைக் குளிப்பாட்டி நிறுத்தி வைத்தான்.
நாடகம் முடிந்து வெளியே வந்து பார்த்த பணக்காரர், தன் குதிரையைச் சுத்தப்படுத்தி, அதன் சேணத்தையும் பளபளப்பாகத் துடைத்து வைத்திருந்த சிறுவனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
அவர், தான் கொடுக்க நினைத்திருந்த பணத்தை விட அதிகமாகக் கொடுத்தார்.
அந்தச் சிறுவனும், அதைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியடைந்தான்.
மறுநாள், அந்த நாடக அரங்கிற்கு வந்த மற்றவர்களும் அவனிடம் குதிரையைப் பாதுகாக்கச் சொல்லி விட்டுச் சென்றனர்.
அவன் அந்தக் குதிரைகளையும் பாதுகாத்து, சுத்தப்படுத்திக் கொடுத்தான்.
இப்படியே அவனுடைய வருமானம் பெருகியது. அதனைத் தொடர்ந்து அங்கு, குதிரை லாயம் ஒன்றை அமைத்து, தன் உதவிக்கும் சில வேலையாட்களை வைத்து முதலாளியாகி விட்டான்.
அங்கு நடைபெற்ற நாடகங்களையும் கவனித்து வந்த அவன், அதிலும் மிகப்பெரிய இலக்கிய மேதையாகி விட்டான்.
அந்தச் சிறுவன் யார் தெரியுமா?
அவன் வேறு யாருமில்லை, உலகப்புகழ் பெற்ற இலக்கிய மாமேதை ஷேக்ஸ்பியர்தான் அவர்.