வகுப்பறைக்கு பாடம் நடத்தச் சென்று கொண்டிருந்த அந்த ஆசிரியர் வகுப்பறைக்கு வெளியே கிடந்த பழைய துணிகள், குப்பைகள் போன்றவைகளைப் பார்த்து, அவைகளைப் பொறுக்கி எடுத்துத் தனது சட்டைப்பையில் வைத்துக் கொண்டு பாடம் நடத்த வகுப்புக்குச் சென்றார்.
பாடம் நடந்து முடிந்ததும் அந்தக் குப்பைகளை மேஜை மீது வைத்து "இந்தக் குப்பைகளை நான்தான் எடுத்துக் கொண்டு வந்தேன். கல்வி கற்கும் இடம் ஒரு ஆலயம். அதைத் தூய்மையாக வைத்துக் கொள்வது நமது கடமை. இனிமேலும் அப்படிச் செய்யாதீர்கள்" என்றார்.
அதே ஆசிரியர், ஒரு இஸ்லாமிய மாணவன் தினம் ஒரு அழுக்குக் குல்லாவை அணிந்து வருவதைப் பார்த்து "நீ எப்போதும் அழுக்கான குல்லாவையே அணிந்து வருகிறாய். இனி துவைத்துச் சுத்தமாக அணிந்து வர வேண்டும்" என்று பலமுறை சொல்லியும் கேட்காததால், அவன் தலையிலிருந்த குல்லாவைத் தானே எடுத்துத் துவைத்துக் கொண்டு போய்க் கொடுத்தார். அந்த மாணவன் வெட்கிக் குனிந்து, அடுத்து சுத்தமான குல்லாவுடன் வரத் தொடங்கினான்.
கல்வியை மட்டுமின்றி சுகாதாரத்தையும் ஒழுக்கத்தையும் கற்றுத் தந்த இந்த ஆசிரியர் தில்லியில் ஜாமிலியா பல்கலைக் கழகத்தை நிறுவி அதன் துணைவேந்தராக இருந்த டாக்டர் ஜாகிர் ஹூசைன் அவர்கள். இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்த சிறந்த கல்வியாளரும் கூட.