உலக ஹெவிவெயிட் குத்துச்சண்டைப் போட்டி அது.
1964-ம் வருடம், முதன்மையான குத்துச்சண்டை வீரர் லிஸ்டைன எதிர்த்து நின்ற 22 வயது கறுப்பு இளைஞன் முகமது அலியைப் பார்வையாளர்கள் பரிதாபமாகப் பார்த்தார்கள்.
போட்டியின் முதல் இரண்டு சுற்றுகள் சாதாரணமாகேவ நடந்தன. மூன்றாவது சுற்றில் முகமது அலியின் குத்து, லிஸ்டனின் புருவத்தைப் பதம் பார்த்தது. காயத்துக்கு மருந்து போட்டு வந்த லிஸ்டன் ஆக்ரோசமாக குத்துக்களை விட்டார்.
அவரது புருவத்தில் இருந்த மருந்து தெறித்து, முகமது அலியின் கண்ணுக்குள் விழுந்துவிட, பெரும் உறுத்தலோடு அடுத்த இரண்டு சுற்று சண்டை போட்டார் அலி. ஆறாவது சுற்றின்போது உறுத்தல் நீங்க, அதிரடி தாக்குதலில் இறங்கினார். அந்தச் சுற்று முடிந்த பின்புதான், தன் கைமூட்டு இடம் பெயர்ந்திருப்பது லிஸ்டனுக்குப் புரிந்தது. அவர் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல் போகவே முகமது அலி உலக முதன்மை குத்துச்சண்டை வீரரானார்.
நிருபர்கள், “இந்த வெற்றியை எதிர்பார்த்தீர்களா?” எனக் கேட்க, உற்சாகமாகப் பேசினார் அலி. “இரண்டாவதாக வருபவனை, உலகம் ஒருபோதும் ஞாபகம் வைத்துக்கொள்வதில்லை என்று எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார் என்னுடைய கோச் மிஸ்டர் ஃபிரட்ஸ் டோனர். அதனால், முதல் இடம் தவிர எதையும் எப்போதும் நான் ஏற்றுக் கொள்வதில்லை” என்றார் அலி தன்னம்பிக்கையுடன். ஆம், கலந்துகொண்ட போட்டிகள் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்று, இறுதிவரை முதல்வனாகவே திகழ்ந்த முகமது அலிக்கு ஊக்கம் தந்த மந்திரச்சொல் அதுதான்.