காமராஜர் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டு பேச இருந்த நேரத்தில் கூட்டத்திலிருந்த சிலர் "உழுபவனுக்கே நிலம் சொந்தம்" என ஓங்கிக் குரல் கொடுத்தார்கள். அவர்களை அமைதியாக இருக்கும்படி சைகை காட்டினார் காமராஜர். பின்னர் பேசும் போது நீங்களெல்லாம் குரல் எழுப்புவது போல எல்லோரும் கேட்க ஆரம்பித்தால் "நூற்றுக்குத் தொண்ணூறு சதவீத மக்கள் பட்டினியால் கிடக்க வேண்டிய நிலை உருவாகிவிடும்." என்றார். கூட்டம் அமைதியானது.
எல்லோரும் காமராஜர் என்ன சொல்லப்போகிறார்? என ஆர்வத்துடன் இருந்தனர்.
"உழுபவனுக்கு நிலம் சொந்தம்" என நாம் சொல்கிறோம். நெற்கதிரை அறுப்பதற்குச் செல்லும் தொழிலாளர்கள் "கதிர் அறுப்பவர்களுக்கே நெல் சொந்தம்" என்று சொல்லி நெற்கதிர்களை அவர்கள் வீட்டுக்கு எடுத்துச் சென்று விட்டால் கஷ்டப்பட்டு உழைத்த தொழிலாளர்களின் நிலை என்ன ஆகும்?
பின்னர் நெல்லை அரிசியாக ஆக்குவதற்கு அரிசி ஆலைக்குக் கொண்டு போகிறோம். அங்கு நெல்லை அரைத்துக் கொடுத்தவர் "தனக்கே அரிசி சொந்தம்" என்று சொல்லி விட்டால் நெல் உரிமையாளர்கள் நிலை என்னவாகும்?
வெறும் கையோடுதானே திரும்ப வேண்டிய நிலைவரும். இப்படியே போய்க் கடைசியில் சோறு சொந்தம் என்று சொல்லிவிட்டால் எல்லோர் நிலையும் என்ன ஆகும்? பட்டினிதானே? இந்த நிலை நாட்டில் ஏற்படக்கூடாது.
"உழைக்கும் ஒவ்வொருவருக்கும் தங்கள் உழைப்புக்கு ஏற்றவாறு கூலி கேட்க வேண்டும் என்பதுதான் நல்லது" என எளிமையாக விளக்கம் தந்தார் காமராஜர்.
இந்தச் சம்பவம் காமராஜர் முதலமைச்சராகப் பணியாற்றிபோது சிவகிரியில் நடந்தது.
"உழைப்புக்கு ஏற்ற கூலி கேட்பதே சிறந்தது" என்கிற காமராஜரின் கருத்து உண்மைதானே?.