வீடு வீடாகச் சென்று பொருட்களை விநியோகிக்கும் அந்தச் சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிடக் கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம் வரவில்லை.
“குடிக்க… கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா ?” என்று தயக்கத்துடன் கேட்டான்.
அவள், சிறுவனின் கண்களில் இருந்த பசியைக் கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலைக் கொண்டு வந்து கொடுத்தாள்.
பாலைக் குடித்துப் பசியாறிய சிறுவன், “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?” என்றான்.
“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்” அவள் சிரித்துக் கொண்டே சொன்னாள்.
“ரொம்ப நன்றி…” என்று அந்தச் சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.
ஆண்டுகள் கழிந்தன. கஷ்டத்திற்கிடையிலும் அந்தச் சிறுவன் மருத்துவம் படித்து, அந்த நகரிலேயே மிகப்பெரிய டாக்டர் ஆனான்.
அந்தச் சமயத்தில், அந்தப் பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.
அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மருத்துவக் குறிப்பேட்டில் அந்தப் பெண்ணின் ஊர் பெயரைப் பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்தப் பெண்ணைப் பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.
அன்று முதல் தனது அத்தனை உழைப்பையும், கவனத்தையும் செலுத்தி, அந்தப் பெண்ணுக்குச் சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர், அவள் குணமானாள்.
பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்தப் பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படிக் கட்டப்போகிறோமோ என்று பதற்றத்துடன் அதைப் பிரித்தவள் திகைத்துப் போனாள்.
அந்தப் பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.
“இந்தப் பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. என் சிறு வயதில் தாங்கள் கொடுத்த ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”
அவளுக்கு கண்கள் பனித்தன.
சிறு வயதில் தன்னுடைய பசிக்கு ஒரு கப் பால் கொடுத்து உதவிய அந்தப் பெண்ணிற்கு நன்றியுடன் இலவசமாக மருத்துவம் செய்தவர் யாரென்றுதானே கேட்கிறீர்கள்...?
அவர், அமெரிக்காவில் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய டாக்டர் ஹோவார்டு ஹெல்லி (Dr. Howard Kelly (1858-1943)) என்பவர்தான்.