பிரபல எழுத்தாளர் மார்க் ட்வைனிடம் ஒரு பழைய குடை இருந்தது. அவர் எப்போதும் இந்தக் குடையுடன் தான் காணப்படுவார்.
ஒரு நாள் அவருக்கே இந்தக் குடை கிழிந்து அசிங்கமாக இருக்கிறதே என்று தோன்றியது.
அதை உடனே வழியில் இருந்த குப்பைத் தொட்டியில் போட்டுச் சென்றார்.
சிறிது நேரத்திலேயே அவருடைய நண்பர் ஒருவர், “என்ன உன் குடையைத் தவறிக் கீழே விட்டு விட்டாயா? யாரோ குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார்கள். நல்லவேளை, அதை நான் பார்த்ததால் எடுத்துக் கொண்டு வந்து விட்டேன். கவனமாகப் பார்த்துக்கொள்” என்று கூறிக் கொடுத்துச் சென்றார்.
ட்வைன் தலையில் அடித்துக் கொண்டார். கீழே போட்டால்தானே எடுத்துக் கொடுக்கிறார்கள் என்று எண்ணிய அவர் மறுநாள், அக்குடையை ஒரு கிணற்றில் போட்டு விட்டு சென்றார்.
மறுநாளே கிணற்றைத் தூர் வாரச் சென்ற ஒருவன் குடையை எடுத்து அது ட்வைனுடையது என்பதறிந்து அவரிடமே கொண்டு வந்து சேர்த்து விட்டான்.
அவருக்குக் கடும் எரிச்சல் ஏற்பட்டது.
எங்கு போட்டாலும்,வேண்டாம் என்று நினைத்த குடை திரும்ப வந்து விடுகிறதே என்று வருந்திய அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு ஒரு முடிவுக்கு வந்தார்.
அடுத்த நாள் மழை பெய்து கொண்டிருந்தது.
அவரைப் பார்க்க வந்த நண்பர் வெளியே செல்ல அவரிடம் ஏதாவது குடை இரவல் தர முடியுமா” என்று கேட்டார்.
மகிழ்ச்சியுடன் அவரும் தனது குடையை எடுத்துக் கொடுத்தார்.
அதன்பின் அந்தக் குடையைப் பற்றிய கவலை அவருக்கு வரவே இல்லை.
இரவல் கொடுத்த பொருள் திரும்ப வருமா?