ஒரு முறை அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் தன்னுடைய கண்டுபிடிப்புகள் பற்றிய விளக்கவுரை ஆற்றக் காரில் சென்றுகொண்டிருந்தார். ஆனால், உடல்நிலை சரியில்லாததால் சோர்வுற்று இருந்தார்.
இதைக் கண்ட ஓட்டுநர் மிகுந்த அக்கறையுடன், “அய்யா... இன்றைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாமே...?” என்று கேட்டார்.
“அது இயலாது டாம்... நிறைய பேர் காத்துக் கொண்டிருப்பார்கள்... அவர்களை ஏமாற்ற எனக்கு விருப்பமில்லை..!” என்றார் ஐன்ஸ்டீன்.
இருந்தாலும் ஓட்டுநருக்கு மனசு தாளவில்லை... ஒரு யோசனை சொன்னார்.
“அய்யா... ஒன்று சொன்னால் கோபிக்க மாட்டீர்களே...? நான் உங்கள் உரைகளை நிறையக் கேட்டிருக்கிறேன்... இன்று உங்களுக்குப் பதிலாக, உங்களுடைய இடத்திலிருந்து நான் உரையாற்றுகிறேனே...?’
ஐன்ஸ்டீனுக்கு இந்த யோசனை பிடித்திருந்தது.
கூட்ட அரங்கிற்குச் சென்றதும், ஓட்டுநரின் தொப்பியை அணிந்து கொண்டு கடைசி இருக்கையில் போய் அமர்ந்தார் ஐன்ஸ்டீன்.
ஓட்டுநர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் உரை ஆற்றினார்.
கூட்டத்தினருக்கு ஐன்ஸ்டீன் எப்படியிருப்பார்? என்று தெரியாததால் ஓட்டுநர்தான் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டீன் என்று நம்பினர்.
அப்போதுதான் திடீரென்று ஒரு எதிர்பாராத சிக்கல் ஒரு பேராசிரியர் வடிவில் வந்தது.
அவர் ஒரு விடயத்தைப் பற்றிய சந்தேகத்தை நீண்ட கேள்வியாகக் கேட்டு விளக்கமளிக்க வேண்டினார்.
அதனைக் கேட்டுத் திக்கு முக்காடிப் போன ஓட்டுநர் சிறிது நேரத்தில் சுதாரித்துக் கொண்டார்.
பின்னர் அவர், “இது மிகவும் சிறிய பிரச்னை பேராசிரியரே... இதற்கான விளக்கத்தைக் கடைசி வரிசை இருக்கையில் அமர்ந்திருக்கும் என் ஓட்டுநரே சொல்வார்” என்றார்.
ஓட்டுநரின் சாமர்த்தியத்தை எண்ணி வியந்துகொண்டே ஐன்ஸ்டீன் மேடைக்கு விளக்கமளிக்க எழுந்து சென்றார்.