ரத்னபுரி மன்னர் ஏராளமான குரங்குகளைப் பராமரித்து வந்தார். அவற்றுக்குத் தினமும் நிறையத் தின்பண்டங்கள் வழங்கி வந்தார். குரங்குகளுக்கு அரண்மனை வாழ்க்கை சுகமாக இருந்தது. அவைகளுக்கு அங்கிருந்து வெளியேற விருப்பமில்லை.
இதே போல் அரண்மனையில் பன்றிகளும் நிறைய வளர்ந்து வந்தன. அவற்றில் ஒன்று மிகப் பொல்லாதது. தினமும் சமையலறைக்குள் நுழைந்து கிடைத்ததைத் தின்று தீர்க்கும். பண்டங்களை வாரி இறைத்து வீணாக்கி விடும். சமையல்காரர் பிரம்பு கொண்டு அடித்து விரட்டியும் அந்தப் பன்றிக்குப் புத்தி வரவில்லை.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தன குரங்குகள். ஒரு கிழக் குரங்கு மட்டும் முன் யோசனையுடன் சொல்லியது,"நண்பர்களே, நாம் இனி மேல் இங்கே இருக்கவே கூடாது. இந்த சுரணை கெட்ட பன்றி எவ்வளவு அடி வாங்கினாலும் லட்சியம் செய்யாமல் தினமும் சமையலறைக்குள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு நாள் சமையல்காரருக்குக் கோபம் மேலிட்டுவிடும், கொள்ளிக் கட்டையை எடுத்து அதன் மீது வீசி எறிவார். பன்றியின் !உடம்பில் தீப்பற்றிக் கொண்டு விடும். அந்தப் பன்றி அருகிலுள்ள குதிரை லாயத்துக்குள் நுழைந்து விட்டால் லாயம் தீப்பற்றி எரியும். இதனால் குதிரைகளுக்கு தீக்காயம் ஏற்பட்டு விடும். மிருக வைத்தியர்கள் வந்து, குரங்குகளின் சதைக் கொழுப்பை எடுத்துத் தீயில் வாட்டிப் போட்டால், குணமாகி விடும் என்று சொல்வார்கள். உடனே, அரசன் அனைத்துக் குரங்குகளையும் கொல்லும்படி உத்தரவிட்டு விடுவான். நாம் கூண்டோடு மாண்டு விடும் அபாயம் உள்ளது. எனவே நாம் இப்போதே முன் எச்சரிக்கையுடன் இந்த இடத்தை விட்டுக் காட்டுக்குப் போய் விடுவோம். வாருங்கள்"
இதைக் கேட்டதும் பல குரங்குகள் கிழக் குரங்கை ஏளனம் செய்யத் துவங்கியது. "வயதானாலே புத்தி தடுமாறத்தான் செய்யும் " என்றது ஒரு குரங்கு.
"ஆபத்து வர வேண்டுமென்று இருந்தால், எங்கே இருந்தாலும் வரத்தான் செய்யும். இதற்காகப் பயந்து ஓடுவதா..." என்று கேலி செய்து பேசியது மற்றொரு குரங்கு.
"இதெல்லாம் வெறும் கற்பனை, வேளைக்கு வேளை வசதியாகக் கிடைக்கும் நல்ல சாப்பாட்டை விட்டுவிட்டு காட்டில் போய்க் கஷ்டப்படுவதா, மடத்தனம்" என்றது இன்னொரு குரங்கு.
இப்படிப் பல எதிர்ப்புகள். பெரும்பான்மை பலம் மற்றக் குரங்குகளைச் சிந்திக்க விடவேயில்லை.
கிழக் குரங்கு மட்டும், மனச் சோர்வுடன் அரண்மனையை விட்டு வெளியேறிக் காட்டுக்குப் போய் விட்டது.
சில நாட்களுக்குப் பிறகு கிழக் குரங்கு எச்சரித்தபடியே நடந்து விட்டது.
அதிக பட்சக் குரங்குகளின் தீர்மானம் அறிவீனத்தைக் கொண்டிருந்ததால் அவை அழிந்தன.
பலரின் ஏகோபித்த எண்ணம் என்பதால் அது நன்மை அளிப்பதாக அமைய முடியாது. இதே போல் ஆயிரம் அறிவிலிகள் ஒன்று சேர்ந்தாலும், ஒரு அறிவாளிக்குச் சமமாக முடியாது.