ஒருமுறை பிச்சைக்காரன் ஒருவன் முன் செல்வத்துக்கு அதிபதியான லட்சுமி தேவி பிரசன்னமாகி அவனுக்கு ஆசி வழங்கினாள்.
“உனக்கு எவ்வளவு பொன் வேண்டுமானாலும் கேள், தருகிறேன். ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, பொன் தரையில் விழுந்து விட்டால் அது தூசியாகி விடும்.” என்று லட்சுமி தேவி சொன்னாள்.
பிச்சைக்காரன் தான் வைத்திருந்த பையை இரண்டு கரங்களாலும் விரித்துப் பிடித்தான். பை நிரம்பும் வரை லட்சுமி தேவி பொன்மழை பொழிந்தாள். அது அவனுக்குப் பல தலைமுறைகளுக்குப் போதும். ஆனால் அவனது பேராசை இன்னும் அதிக தங்கத்தைச் சேகரித்துக் கொள்ளத் தூண்டியது. இன்னும் பை நிறைய பொன்மழை பொழிய வேண்டும் என்று ஆவலுடன் வேண்டினான். லட்சுமி தேவியும் பொன்மழை பொழிந்து விட்டு உடனே மறைந்து விட்டாள்.
அதிக தங்கத்தைத் தாங்க முடியாத பை கிழிந்து விட்டது. அதிலிருந்த தங்கம் முழுவதும் தரையில் கொட்டியது. அது உடனே தூசியாக மாறிவிட்டது.
பேராசை பெருநஷ்டமாகி விட்டது.
கடவுளின் ஆசியைப் பெற்றாலும் கூட தனது தகுதியையும் வலிமையையும் உணராமல் செயல்பட்டால், அதனால் நற்பலன் பெற முடியாமல் போய்விடும்.