பங்கி எனும் ஜென் ஞானி மிகவும் புகழ் பெற்று விளங்கினார். அவரிடம் அதிகமான மாணவர்கள் படித்து வந்தார்கள்.
இதனைக் கண்டு பொறாமை கொண்ட நிச்சேரியன் எனும் துறவி அவரிடம் விவாதம் புரிவதற்காக அவர் இருந்த இடத்தைத் தேடி வந்தார்.
அங்கு அவர் மாணவர்களுக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
அதைக் கண்ட நிச்சேரியன், “பங்கி! உங்களுக்கு யாராவது மரியாதை செய்தால் நீங்கள் பணிபுரிவீர்கள் இல்லையா? என்னைப் போன்றவர்கள் உமக்கெல்லாம் மரியாதையே தருவதில்லை. என்னை உம்மால் பணிய வைக்க முடியுமா?” என்று கேட்டார்.
உடனே பங்கி, “இங்கே என் அருகில் வாருங்கள். அது எப்படி என்று விளக்குகிறேன்” என்றார்.
உடனே துறவி கூட்டத்தை விலக்கிக் கொண்டு, ஆணவமாக, பங்கியை நோக்கிச் சென்றார்.
பங்கி அவரைப் பார்த்து, “இப்படி, எனது இடது பக்கம் வாருங்கள்” என்று அழைத்தார்.
நிச்சேரியனும் அவர் சொன்னபடி சென்றார்.
“அதிகம் நெருங்கி வந்து விட்டீர்கள். சிறிது பின்னால் செல்லுங்கள்” என்றார் பிங்கி, அந்தத் துறவியும் அப்படியே போனார்.
பங்கி அமைதியாக, “சரி! நான் சொல்கிறபடியெல்லாம் நீ பணிந்து நடக்கிறாய், இனி நீயும் இங்கிருக்கும் மாணவர்களைப் போல், பாடம் கற்க முடியும். இப்போது நீ எனது பக்கத்தில் அமர்ந்து பாடத்தைக் கவனி !” என்றார்.