வகுப்பாசிரியர் குறிப்பிட்ட பாடத்தை நன்கு நடத்தி முடித்துவிட்டு மாணவர்களைப் பார்த்து, "ஏதாவது சந்தேகம் இருந்தால் கேளுங்கள்" என்றார்.
யாரும் எதையும் கேட்கவில்லை. வகுப்பு முடிய இன்னும் நிறைய நேரம் இருந்தது. ஆனாலும் ஆசிரியர் அடுத்த பாடத்தை நடத்தாமல் அந்தப் பாடத்தையே மீண்டும் மீண்டும் படிக்கும்படி வலியுறுத்தினார். அதுதான் அவருக்கே உரித்தான வழக்கமும்கூட. எப்போதுமே ஒரு வகுப்பில் ஒரு பாடத்தை மட்டுமே நடத்துவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.
அந்த வகுப்பில் படிக்கும் மாணவன் பாண்டிக்கு இது பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் ஒரே பாடத்தை நடத்துவதை வெறுத்தான். ஒரு நாள் அதை நேரடியாக அவரிடமே கேட்டும் விட்டான்.
"ஒரே பாடத்தைத் திரும்பத் திரும்ப நடத்துவதால் அது எளிதாக மனத்தில் பதியும் என்பது உண்மைதான். ஆனால், வெவ்வேறு பாடங்களை வெவ்வேறு உதாரணங்களுடன் நீங்கள் நடத்தும் போது அது மனதிற்கு இதமாகவும் இருக்கும் அல்லவா? அதோடு அடுத்த பாடத்தை நடத்தாமல் நேரத்தை வீணாக்கலாமா சார்? " என்றான்.
ஆசிரியர் சிறுது நேரம் அவனை அமைதியாகக் கூர்ந்து பார்த்தார். பிறகு, "நீ மாலையில் என்னோட வீட்டுக்கு வா!" என்று சொல்லிவிட்டு வகுப்பு முடிந்ததும் கிளம்பினார்.
மாலையில் பாண்டி ஆசிரியர் வீட்டுக்குச் சென்றான்.
ஆசிரியர் அவனை அவர் வீட்டை ஒட்டியிருந்த தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். தோட்டத்தின் கோடிக்குச் சென்று, அங்கு மூடி வைத்திருந்த கூடையை அப்படியே தூக்கினார். அதுவரை அதன் உள்ளே அடைபட்டிருந்த சில கோழிகள் அங்கிருந்து ஓடின.
ஆசிரியர் பாண்டியைப் பார்த்து, "அந்தக் கோழிகளைப் பிடி..பிடி" என்று சத்தம் போட்டார்.
பாண்டியும், அந்தக் கோழிகளை விரட்டிக்கொண்டு அதன் பின்னால் ஓடினான்.
சிதறி ஓடிய கோழிகள் நான்குபுறகும் பறக்க, பரபரப்படைந்த பாண்டி, எதைப் பிடிப்பது என்று தெரியாமல் அங்கும் இங்கும் ஓடினான்.
இறுதியில் களைப்படைந்து எதையும் பிடிக்காமல் சோர்ந்து போய் வந்தான்.
ஆசிரியர் அவனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே, "பாண்டி, அந்தக் கருப்புக் கோழியை மட்டும் முதலில் பிடித்து வா. பிறகு மற்றவற்றைப் பிடிக்கலாம்' என்று கூறினார்.
பாண்டி இப்போது அந்தக் கருப்புக் கோழியைக் குறிவைத்து துரத்தினான். சில நிமிடங்களில் அந்தக் கோழி ஓடி ஓடிக் களைப்படைந்து நின்றது. உடனே அவன் அதைப் பிடித்து விட்டான்.
ஆசிரியர் அவனிடம் வந்து, "பாண்டி, ஒன்றை மட்டும் குறி வைத்ததால், எளிதாக வென்றுவிட்டாய். அதேபோல்தான் நானும் ஒரு பாடத்தை மட்டும் குறிவைத்து நடத்துகிறேன்" என்று அவனுக்கு விளக்கினார்.
பாண்டியும் புரிந்ததாகத் தலையாட்டினான்.