நல்ல வெயில் புரட்டிப்போட்டுக்கொண்டிருந்தது பூமியை. மண்ணும் கல்லும் எல்லாம் கொதித்துக் கிடந்தன.
பறந்து களைத்த காகத்திற்குச் சரியான தாகம். அது தண்ணீர் தேடி அலைந்தது.
கடைசியாக ஒரு இடத்தில் சிறிய ஜாடி ஒன்றில் சிறிது தண்ணீர் இருப்பதைக் கண்டது.
நிச்சயம் காகம் தன் அலகை அதனுள் நுழைத்துத் தண்ணீரைக் குடிக்க முடியாது. அதற்குத் தலையையும் ஒருகுறிப்பிட்ட அளவுக்கு மேல் உள்ளே திணிக்க முடியவில்லை.
காகத்திற்குத் தாகம் அதிகரித்துக் கொண்டே போனது.
பக்கத்தில் வேறு எதாவது கிடைக்குமா என்று சுற்றிலும் பார்த்தது.
அங்கு சிறு சிறு கூழாங்கற்கள் கிடந்தன. அந்தக் கற்களும் கொதித்துக் கிடந்தன.
கற்களை நன்றாக உற்றுப் பார்த்தது காகம்.
அந்தக் கற்களுக்கிடையில் சின்ன செடியொன்று முளைத்துக் கிடந்தது. நாலைந்து இதழ்கள் துளிர் விட்டிருந்தன. ஆனால் அச்செடி வாடிக்கிடந்தது.
காகம், அந்தத் தண்ணீர் உள்ள ஜாடியை நகர்த்திப் போய் அந்த செடியின் மேல் கவிழ்த்தது.
ஜாடியின் உள்ளே இருந்த கால்பாகம் தண்ணீர் மெல்லத் தரையில் பரவி, அந்தச் செடியின் வேருக்குள் இறங்கியது.
செடியின் வாடிய இலைகள் நிமிர்ந்தன.
நம்மால் முடிந்த உதவியைப் பிறருக்குச் செய்ய வேண்டும் என்பதை நமக்கு இந்தக் கதை மூலமாக உணர்த்திய காகம் தண்ணீர் தேடி மீண்டும் சிறகை விரித்து ஆகாயம் பார்த்துப் பறந்தது.