சிங்கம் ஒன்று வேட்டையாடுவதற்காக கழுதை ஒன்றை உதவும்படியும் அதற்குத் தகுந்த பங்கை தந்து விடுவதாகவும் கூறியது.
கழுதையும் காட்டின் அரசனான சிங்கமே நம்மிடம் உதவி கேட்கிறதே என்று மகிழ்ந்து போய் ஒத்துக் கொண்டது.
சிங்கமும் கழுதையும் ஒன்றாகச் சேர்ந்து வேட்டைக்குப் புறப்பட்டன.
காட்டில் எந்த விலங்கைக் கண்டாலும் கழுதை துரத்திச் சென்று கீழே தள்ளிவிட வேண்டும். கீழே விழுந்து கிடக்கும் விலங்கின் மீது பாய்ந்து அதைக் கொல்வது சிங்கத்தின் வேலை.
இப்படி மான் ஒன்றைக் கழுதை தள்ளிவிட சிங்கம் பாய்ந்து கொன்றது.
மானின் இறைச்சியை மூன்று பங்குகளாகப் பிரித்தது சிங்கம்.
முதல் பங்கைக் காட்டிய சிங்கம் , "காட்டின் அரசன் நான். எனவே இந்த முதல் பங்கு எனக்கு உரியது." என்றது.
நானும் உன்னுடன் சேர்ந்து வேட்டையாடினேன். அதற்காக இந்த இரண்டாம் பங்கும் எனக்கு உரியது.
மூன்றாம் பங்கை நீயே விருப்பப்பட்டு எனக்குத் தந்து விடுவாய். என்னை மீறி இந்தப் பங்கை எடுக்கும் துணிவு உனக்கு உள்ளதா? அப்படி முயற்சி செய்தால் நீ வாழ்நாள் முழுமைக்கும் வருத்தப்பட வேண்டியிருக்கும் " என்று கர்ஜனை செய்தது.
சிங்கம் தன்னுடைய உழைப்பை உதாசீனப் படுத்தியதுடன் நன்றி மறந்து மிரட்டியதைக் கண்டும் கழுதை மன வேதனையுடன் அந்த இடத்தை விட்டுச் சென்றது.
வலிமையானவர்கள் எளியவர்களிடம் இப்படித்தான் ஏதாவது ஆசை வார்த்தைகளைக் கூறி எப்படியாவது ஏமாற்றி விடுகின்றனர்.
நாம்தான் ஏமாறாமல் இருக்க வேண்டும்.