கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு வேட்டைக்காரன் இருந்தான்.
வேட்டைக்காரனிடம் அவன் வேட்டைக்குப் பயன்படுத்தும் வேட்டை நாய்கள் சில இருந்தன.
வேட்டைக்காரனின் நாய்கள் அடிக்கடி வேலி தாண்டிச் சென்று விவசாயியின் ஆட்டுக்குட்டிகளைத் துரத்துவதும் கடித்துக் குதறுவதுமாக இருந்தன.
இதனால் கலக்கமுற்ற விவசாயி, தன் அண்டைவீட்டுக்காரனான வேட்டைக்காரனைச் சந்தித்து “அப்பா… உன் நாய்களைக் கொஞ்சம் பார்த்துக்கொள். அவை அடிக்கடி என் பகுதிக்கு வந்து ஆடுகளை தாக்குகின்றன. காயப்படுத்துகின்றன” என்றான்.
வேட்டைக்காரன் அதை சட்டை செய்யவேயில்லை. செவிடன் காதில் ஊதிய சங்காக அவை எந்தப் பயனும் இன்றி போனது.
ஒரு முறை நாய்கள் இதே போல வேலி தாண்டி வந்து பட்டிக்குள் புகுந்து பல ஆட்டுக்குட்டிகளைக் கடித்துக் குதறின.
இந்த முறையும் வேட்டைக்காரனிடம் புகார் செய்யச் சென்றான் விவசாயி.
வேட்டைக்காரன் இந்த முறை சற்று கோபத்துடன், “இதோ பார்… ஆட்டை துரத்துறது கடிக்கிறது இதெல்லாம் நாயோட சுபாவம். அதுக்கெல்லாம் நான் ஒன்னும் செய்யமுடியாது. உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ” என்றான்.
இதைத் தொடர்ந்து ஊர்ப் பஞ்சாயத்துத் தலைவரைச் சென்று சந்தித்த விவசாயி, வேட்டைக்காரனின் நாய்களால் தான் படும் துன்பத்தை எடுத்துக்கூறி, அவன் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டான்.
முன்பொரு முறை பஞ்சாயத்து தலைவரின் மகளை ஒரு சிறிய விபத்திலிருந்து விவசாயி காப்பாற்றியிருப்பதால் பஞ்சாயத்து தலைவருக்கு விவசாயி மீது பெரும் மதிப்பு இருந்தது.
விவசாயிக்கும் வேட்டைக்காரனுக்கும் இடையே உள்ள பிணக்கைப் பற்றி விசாரித்துத் தெரிந்துகொண்ட பஞ்சாயத்துத் தலைவர், “என்னால் பஞ்சாயாத்தைக் கூட்டச் செய்து அந்த வேட்டைக்காரனைத் தண்டித்து, அபராதம் விதித்து அவன் நாய்களை கட்டிப்போடச் செய்ய முடியும். ஆனால், நீ தேவையின்றி இதனால் ஒரு எதிரியைச் சம்பாதிக்க நேரிடும். உனக்கு அது சொந்த வீடு. அவனுக்கும் அது சொந்த வீடு. இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் தினசரி பார்க்கவேண்டும். அப்படியிருக்கையில் பக்கத்து வீட்டுக்காரன் நண்பனாக இருப்பதில் உனக்கு விருப்பமா அல்லது எதிரியாக இருப்பதில் விருப்பமா?” என்று கேட்டார்.
பஞ்சாயத்து தலைவர் சொல்வதில் உள்ள உண்மையைப் புரிந்து கொண்ட விவசாயி, “அண்டை வீட்டுக்காரனை ஒரு நண்பனாகப் பார்ப்பதில்தான் தனக்கு விருப்பம்” என்றான்.
“சரி… உன் ஆட்டுக்குட்டிகளும் பத்திரமாக இருப்பது போலவும், அவனும் உன் நண்பனாக இருப்பது மாதிரியும் நான் ஒரு தீர்வைச் சொல்கிறேன்… கேட்பாயா?”
“நீங்கள் எதைச் சொன்னாலும் கேட்கிறேன்”
அடுத்துப் பஞ்சாயத்து தலைவரும் சில விஷயங்களை அவரிடம் சொன்னார்.
வீட்டுக்கு வந்த விவசாயி பஞ்சாயத்துத் தலைவர் தன்னிடம் சொன்ன விஷயங்களைச் செய்து பார்க்க நினைத்தான்.
தனது பட்டியில் இருக்கும் ஆட்டுக் குட்டிகளிலேயே மிகவும் அழகான இரண்டு குட்டிகளை எடுத்துச் சென்று, வேட்டைக்காரனின் இரண்டு மகன்களுக்கும் தலா ஒரு குட்டியை விளையாடப் பரிசளித்தான்.
குழந்தைகளுக்குத் தாங்கள் விளையாடப் புதிய தோழர்கள் கிடைத்ததில் ஒரே மகிழ்ச்சி. இருவரும் அந்தக் குட்டிகளுடன் விளையாடி மகிழ்ந்தார்கள்.
தன் குழந்தைகளின் புதிய தோழர்களைப் பாதுகாக்க நினைத்த வேட்டைக்காரன், அவனது வேட்டை நாய்களைச் சங்கலியில் கட்டிப்போட வேண்டியிருந்தது. யாரும் சொல்லாமலே அவன் நாய்களைச் சங்கிலியால் பிணைத்தான்.
தனது மகன்களுக்கு விவசாயி ஆட்டுக்குட்டிகள் பரிசளித்ததைத் தொடர்ந்து பதிலுக்கு அவனுக்கு ஏதேனும் பரிசளிக்க விரும்பி, தான் காட்டிலிருந்து கொண்டு வந்த சில அரிய பொருட்களைப் பரிசளித்தான் வேட்டைக்காரன்.
ஆக இருவருக்குள்ளும் நல்லுறவு வளர்ந்து நாளடைவில் நல்ல நண்பர்களாகிவிட்டனர்.
இப்படித்தான் நட்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.