ஒரு ஊரில் தாய், தந்தை ஒரு பெண் குழந்தை என ஒரு அழகிய குடும்பம் வசித்து வந்தது. அன்பும் பண்பும் நிறைந்த அந்தக் குழந்தைக்கு இரண்டு வயதே முடிந்திருந்தது. தாயும் தந்தையும் தான் தன்னுடைய உலகம் என்று எப்போதும் அவர்களையேச் சுற்றிவந்தால் அந்த அழகிய சிறுமி.
ஒரு நாள் அந்தச் சிறுமி தன் இரு கைகளிலும் இரண்டு ஆப்பிள் பழத்தை வைத்திருந்தால். சிறுமியிடம் விளையாடிக் கொண்டிருந்த தாய், என் செல்லமே உன்னிடம் தான் இரண்டு ஆப்பிள் இருக்கிறதே அதில் ஒன்றை எனக்குத் தருவாயா? என்று சிரித்துக் கொண்டே கேட்டாள்.
சில நொடிகள் யோசித்த அந்தக் குழந்தை ஒரு ஆப்பிளை கடித்தது, அதன் பின் இன்னொரு ஆப்பிளையும் கடித்தது. இதைக் கண்ட தாயின் முகம் வாடியது. இவள் தான் நம் உலகம் என்று வாழ்கிறோம். ஆனால், இவளுக்கோ ஒரு ஆப்பிளைக் கூட நமக்குத் தர மனம் இல்லையே என்று வருதினாள். ஆனால் அதை அவள் அந்தக் குழந்தையிடம் காட்டிக் கொள்ளவில்லை.
இரண்டு ஆப்பிளையும் கடித்துச் சுவைத்த அந்தக் குழந்தை ஒரு ஆப்பிளைத் தன் தாயிடம் நீட்டி, “இந்த ஆப்பிள் தான் ருசியாக உள்ளது அம்மா. இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்” என்றாள்.
அந்தத் தாய்க்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கண்களில் நீர் பொங்கியது. உடனே அந்தக் குழந்தையை அணைத்து முத்தமிட்டாள்.