மிக மிக உயரமான, முரட்டு உருவமும் தோற்றமும் உள்ள ஒரு ஜப்பானியப் போர்வீரன் ஒரு சிறிய உருவமுள்ள புகழ்பெற்ற ஜென் மாஸ்டரை அணுகி நரகம் சுவர்க்கம், பாவ புண்ணியங்கள் போன்ற அறிவை அடைய எண்ணினான்.
ஜென் மாஸ்டரைக் கண்டார் போர் வீரன். நரகம், சுவர்க்கம் பற்றி தெரிவிக்கும்படி, போர்வீரனுக்கே உண்டான முரட்டு அதிகாரத் தொனியில் கோரினான்.
அந்த முரட்டு வீரனின் முகத்தைச் சற்று நேரம் பார்த்து விட்டுச் சிறிது மௌனத்தில் ஆழ்ந்தார், ஜென் முனி.
திடீரென்று, நீ ஒரு அசிங்கம். உன்னிடமிருந்து சகிக்க முடியாத நாற்றம் வருகிறது. உன் போர்வீர சமுதாயத்திற்கே நீ ஒரு களங்கம் என்றெல்லாம் சரமாரியாகத் திட்டினார் ஜென் மாஸ்டர். என் கண் பார்வையிலிருந்து உடனே போ, உன்னை இன்னும் சிறிது நேரம் கூட பார்க்கச் சகிக்க முடியாது. என் கண் பார்வையிலிருந்து உடனே சென்று ஒழி என்றெல்லாம் கூறினார்.
அதனைக்கேட்ட போர்வீரன் கோபமடைந்தான். கோபத்தில் முகம் சிவந்தது. மிகுந்த கோபத்தினால் போர்வீரன் பேச்சிழந்தான். கோபம் கொப்பளிக்கத் தன் வாளை உருவினான். தன் தலை மேலாக வாளைப் பிடித்து, ஜென் குருவை வெட்டித் தள்ளத் தயாரானான்.
ஜென் குரு சொன்னார் ‘அதுதான் நரகம்’ என்று...
அதைக்கேட்ட போர்வீரன் திடுக்கிட்டான்.
தனக்கு அறிவு புகட்டத் தன் உயிரைக் கூட இழக்கத் தயாரான ஜென் குருவின் அன்பும், மேன்மையும் போர்வீரனின் மனத்தை மாற்றியது...
வாளைத் தாழ்த்தினான். விவரிக்க முடியாத ஒரு உணர்ச்சி அவன் உடல் முழவதும் வியாபித்தது.
திடீரென்று, அவன் மனம் அமைதி அடைவதை உணர்ந்தான்.
இப்போது ஜென் மாஸ்டர் சொன்னார், இதுதான் ‘சுவர்க்கம்’ என்று.