துறவி ஒருவர் தம் சீடர்களிடம், "நான் ஒரு விடுகதை சொல்கிறேன். அதற்கு சரியான விடை சொல்லுங்கள் பார்ப்போம்" என்றார்.
சீடர்களும் ஆர்வத்துடன், " விடுகதையைச் சொல்லுங்கள்" என்றனர்.
"வருவது போவது இரண்டு, வந்தால் போகாது இரண்டு, போனால் வராது இரண்டு. இந்த விடுகதைக்கு யாராவது விளக்கம் தாருங்கள் பார்க்கலாம்" என்றார்.
சீடர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
ஒருவருக்கும் விடை தெரியவில்லை.
அவர்கள் துறவியைப் பார்த்தனர்.
அந்தத் துறவியே அந்த விடுகதைக்கு விளக்கமளித்தார்.
"வருவது போவது இரண்டு என்பது வறுமையும் செல்வமும். இந்த இரண்டும் யாரிடமும் நிலைத்து நிற்காது. மாறி மாறி வந்து போய்க் கொண்டிருக்கும்.
வந்தால் போகாது இரண்டு என்பது புகழும் பழியும். புகழோ பழியோ ஒருவரிடம் சேர்ந்து விட்டால் எப்போதும் நிலைத்து நிற்கும். அவரை விட்டுப் போகாது.
போனால் வராது இரண்டு என்பது மானமும் உயிரும். மானமும் உயிரும் ஒருவரை விட்டு நீங்கி விட்டால் பிறகு எப்போதும் வராது." என்றார்.