ஒரு ஊரில், ஒரு வெங்காயம், ஒரு தக்காளி மற்றும் ஒரு ஐஸ் கிரீம் என்று மூன்று பேரும் நண்பர்களாக இருந்தனர்.
ஒரு நாள் மூன்று நண்பர்களும் கடற்கரைக்குச் சென்னறனர். அங்கிருந்த தண்ணீரைக் கண்ட, ஐஸ் கிரீம், கடலில் இறங்கிக் குளிக்கப் போனது.
நண்பர்கள் பலர் தடுத்தும், அதைக் கேட்காமல் கடலில் இறங்கிய ஐஸ்கிரீம் கறைந்து போனது.
அதனைக் கண்ட தக்காளியும், வெங்காயமும் அழுது தீர்த்தன.
அங்கிருந்து அவையிரண்டும் கவலையுடன் வீட்டுக்கு வந்தன.
வரும் வழியில் ஒரு வாகனத்தின் சக்கரத்தில் சிக்கிய தக்காளி நசுங்கிப் போனது.
அதனைக் கண்ட வெங்காயம் தேம்பித் தேம்பி அழுதது.
பின்னர் அது அழுது கொண்டே கடவுளிடம் சென்று, “ஐஸ் கிரீம் இறந்த போது, நானும் தக்காளியும் சேர்ந்து அழுதோம், இப்போது தக்காளி இறந்த போது நான் அழுதேன். அடுத்து நான் இறந்து போனால், எனக்கென்று யார் அழுவார்கள்? எனக்கு அழ இனி யார் இருக்கிறார்கள்?” என்று கேட்டது.
உடனே அந்தக் கடவுளும், “சரி, வெங்காயமேக் கவலைப்படாதே, இனி நீ சாகும் போது உன் அருகில் யாரெல்லாம் இருக்கிறார்களோ... அவர்களெல்லாம் உனக்காக அழுவார்கள்” என்று சொல்லி வரம் கொடுத்தார்.
அன்றைக்குக் கடவுள் கொடுத்த வரத்தால்தான், இன்றும் வெங்காயம் நறுக்கும் போதெல்லாம், அங்கிருப்பவர்கள் கண்ணிலே நீர் வருகிறது.
எப்படி இருக்கிறது இந்தக் கதை...?