மன்னர் அக்பர் அரசசபையில் இருந்த அமைச்சர்களிடம், "அமைச்சர்களே, உலகில் அழகான பூ எது? " என்று ஒரு கேள்வியைக் கேட்டார்.
அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தீவிரமாக யோசனை செய்தார்கள்.
"அரசே! மல்லிகைப்பூ தான் மிகவும் அழகான மலர்" என்றார் ஒரு அமைச்சர்
"அரசே! சாமந்திப்பூவைப் போல அழகான மலர் வேறு எதுவுமில்லை" என்றார் இன்னொருவர்.
"ரோஜாவுக்குத் தான் மலர்களில் அழகு இருக்கிறது" என்றார் மற்றொருவர்.
இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மன்னர் அக்பர் பீர்பாலைப் பார்த்தார்.
"அரசே உலகத்திலேயே அழகான மலர் பருத்திதான்" என்றார் பீர்பால்.
இந்தப் பதிலைக் கேட்டதும் அக்பரும் அவையிலிருந்த மற்ற அமைச்சர்களும் சிரிக்கத் துவங்கினர்.
பின்னர் அக்பர் பீர்பாலிடம், "பருத்தியைப் போய் அழகான மலர் என்று கூறுகிறீர்களே? " என்றார்.
"அரசே, பருத்தியில் இருக்கும் பஞ்சைக் கொண்டு அழகான ஆடைகளை உருவாக்குகிறோம். போர்வை, திரைச்சீலை, புடவை, படுக்கை விரிப்பு என்று கண் கவரும் வண்ணங்களில் பஞ்சைக் கொண்டு நமக்குத் தேவையானவற்றைத் தயாரிக்கிறோம். இந்த பருத்தி ஆடைகள்தான் நமக்கும், நம்முடைய இடத்திற்கும் நிர்வாணத்தை மறைத்து நல்ல அழகைத் தருகிறது. நமக்கு ஆடையாகவும் அழகாகவும் மாறும் அந்தப் பருத்தியைத் தவிர வேறு எந்தப்பூ அழகாக இருக்க முடியும்? " என்றார் பீர்பால்.
அக்பரும் அமைச்சர்களும் பீர்பாலின் அறிவுத் திறமையை வியந்து பாராட்டினர்.