ஒரு நரி பாலைவனத்துக்குச் சென்றது. அங்கே அதிகம் வெயில் அடித்ததால், அந்த நரி ரொம்ப சோர்வாகிப் போனது.
அதிகத் தாகம் எடுத்த அந்த நரி, ஏதாவது தண்ணி தருகிற கிணறு, குளம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டே சென்றது.
அப்போதுதான் அங்கே ஒரு கிணறு இருப்பதைப் பார்த்தது.
மகிழ்ச்சியோடு அந்த நரி அந்தக் கிணற்றின் மேல் ஏறித் தண்ணீர் இருக்கிறதா என்று பார்த்தது.
திடீரென்று கால் வழுக்கித் கிணற்றுக்குள் போய் விழுந்தது அந்த நரி. அந்த நரி பல முறை முயற்சி செய்தும் அதனால் வெளியே வர முடியவில்லை.
“காப்பாத்துங்க ,காப்பாத்துங்க” என்று கிணற்றுக்குள்ளிருந்து கத்திக்கொண்டே இருந்தது அந்த நரி.
அந்தப் பக்கம் யாருமே இல்லாததால், அதிக நேரம் அந்த நரி கத்திக் கொண்டே இருந்தது.
அப்போது அந்தப் பக்கமாக வந்த ஒரு ஆடு, கிணற்றுக்குள்ளிருந்து சத்தம் வந்ததால் அருகில் வந்து கிணற்றுக்குள் எட்டிப் பார்த்தது.
அங்கேயிருந்த நரியைப் பார்த்து, “நரியாரே கிணற்றுக்குள் என்ன பண்றிங்க?” என்று கேட்டது.
அப்போதுதான் நரிக்கு ஒரு யோசனை வந்தது. நம்மை யாரும் மேலேயிருந்து காப்பாத்த முடியாது, யாராவது உள்ளேக் குதித்துத்தான் காப்பாற்ற முடியும். ஆனால், தன்னோட உயிரைப் பணயம் வைத்து யாரும் தன்னைக் காப்பாற்றக் கிணற்றுக்குள்ளேக் குதிக்க மாட்டாங்க, என்கிற உண்மையும் புரிந்தது. நமக்குக் கிடைத்த இந்த ஆட்டை ஏமாற்றுவதைத் தவிர, வேற வழி இல்லை என்று முடிவு பண்ணிய அந்த நரி, ஆட்டிடம், “இங்கே நிறைய நல்ல தண்ணீர் இருக்கிறது. மிகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது. அதனால்தான் மிகவும் மகிழ்ச்சியிலேக் கத்திட்டேன்” என்று சொன்னது.
அவ்வளவு நல்ல தண்ணீரா இங்கே இருக்குது என்று கேட்டது அந்த ஆடு.
“ஆமாம், நீங்க வேண்டுமென்றால் இங்கே உள்ளே வந்து பாருங்க” என்று சொன்னது நரி.
முட்டாளான அந்த ஆடு யோசிக்காமல் உள்ளேக் குதித்தது.
கிணற்றுக்குள்ளேப் போய் விழுந்த அந்த ஆடு அந்தத் தண்ணீரைக் குடித்து மகிழ்ச்சியடைந்தது.
“நரியாரே, நீங்க சொன்ன மாதிரி இந்தத் தண்ணீர் மிகவும் சுவையாக இருக்குது” என்று சொன்ன ஆடு, “ஆமா, இப்ப இந்தக் கிணற்றிலேயிருந்து எப்படி நாம் வெளியே செல்வது” என்று கேட்டது.
அதுக்கு அந்த நரி, “நான் இருக்கேன்ல, நீ என் மேல் ஏறி வெளியேப் போய்விடு” என்று சொன்னது. ஆடும் அதற்கு சரி என்று சொன்னது.
“முதல்ல நான் உன் மேலே ஏறி வெளியேப் போகிறேன், அடுத்து நீ என் மேல் ஏறி வெளியே வா” என்றது.
நரியோட பேச்சிலிருந்த சூதை அறியாத அந்த முட்டாள் ஆடு, நரி வெளியேப் போகக் குனிந்து நின்றது.
உடனே அந்த நரி அந்த ஆட்டின் மேலே ஏறி வெளியேச் சென்று விட்டது.
“நரியாரே, நான் இப்போது எப்படி வெளியே வருவது?” என்று கேட்டது.
“நான் உள்ளே இல்லாத போது, என்னால் எப்படி உனக்குக் குனிய முடியும் முட்டாள் ஆடே” என்று சொல்லிவிட்டு ஓடிப்போனது அந்த நரி.
நரியால் ஏமாற்றப்பட்ட அந்த ஆடு, அந்த நரி சொன்னதை அப்படியே நம்பி இப்படி ஏமாந்து போய்விட்டோமெ என்று சொல்லி வருத்தப்பட்டு அழுதது அந்த ஆடு.
குழந்தைகள் யார் என்ன சொன்னாலும், அந்த வார்த்தைய நல்லாப் புரிஞ்சுக்கிட்டு அதுல இருக்குற உண்மையைத் தெளிவாத் தெரிஞ்சுக்கிட்டு அடுத்தக் காரியத்த செய்யணும் இல்லை என்றால் இந்த ஆடு மாதிரி மாட்டிக் கொண்டு தவிக்க நேரிடும்.