அன்று தென்றல் ஒரு பாறையைக் கடந்து போனது. அது போகும்போது அந்தப் பாறையின் மேல் ஒரு சிறிய விதை கிடந்ததைக் கண்டது.
உடனே தென்றல், அந்த விதையிடம், "நீ இருக்கிற இடத்தைக் கண்டாயா? அது ஒரு பாறை. அங்கு உன்னால் எதுவும் செய்ய முடியாது... அதனால்!, என்னோடு வந்துவிடு, நான் உன்னை பாதுகாப்பாக ஒரு நல்ல நிலத்தில் விட்டுச் செல்கிறேன். நீ வளர்ந்து பெரிய மரமாகி விடுவாய்" எனக் கூறியது...
அதற்கு அந்த விதை, "பரவாயில்லை, நீ உனது வழியில் செல். நான் எனக்குக் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் எப்படியாவது உயிர் வாழ முயற்சி எடுக்கிறேன்" என்று கூறி தென்றலோடு செல்ல மறுத்துவிட்டது.
தென்றலும் தன் வழியேச் சென்றது.
ஆறுமாதம் சென்று அந்தத் தென்றல் அதே வழியில் வந்தது.
அந்த இடத்தில் ஒரு மரத்தைப் பார்த்ததும் தென்றலுக்கு வியப்பு...!
"நீ அந்த விதைதானே! ஆறு மாத காலத்திற்குள் நீ எப்படி இவ்வளவு பெரியதாக வளர்ந்திருக்கிறாய்" என்று தென்றல் கேட்டது.
அதற்கு அந்த விதை, "நான் இந்த இடத்தில் கிடைத்த ஒரு சிறிய மழைத்துளியைப் பயன்படுத்தி, என் வேரை ஊன்றினேன். பின்னர் என் வேரைப் பரப்பி இன்று ஒரு பெரிய மரமாக வளர்ந்திருக்கிறேன். ஆக, நான் எங்கே இருக்கிறேன் என்பது முக்கியமல்ல... எனது மனநிலை எப்படி இருக்கின்றது என்பதுதானே முக்கியம். அதனால்தான் இன்று இவ்வளவு பெரிய மரமாக நான் உருவாக முடிந்தது" என்று சொன்னது.
நீங்கள் விரும்பக்கூடிய வாழ்க்கை கிடைக்கவில்லையென்றால், கிடைத்த வாழ்க்கையை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள். அது, வாழ்க்கையில் மன நிறைவையும், அமைதியையும் ஏற்படுத்தும்...!
கிடைத்த வாழ்க்கையைச் சரியான முறையில் பயன்படுத்தத் தவறும் போது, நிம்மதியை இழக்கக்கூடிய சூழல்கள் ஏற்படும். மகிழ்ச்சியான நாட்களைத் தொடங்க, காலை எழுந்ததும் நமக்கு இருப்பதை வைத்து மனநிறைவு கொள்ள வேண்டும்...
இவற்றை நாம் கடைபிடித்தால் நம்மை சுற்றியுள்ள அனைத்தையும் மகிழ்ச்சியாக அனுபவிக்க முடியும்.