நண்பகல் நேரம். வெயில் சுள்ளென்று அடித்துக் கொண்டிருந்தது. மரத்தின் அடியில் ஒருவன் நன்றாகப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான். வெயில் அவன் மீது பட்டுக் கொண்டிருந்தது.
அந்த வழியாக வந்த விறகு வெட்டி ஒருவன் அவனைப் பார்த்தான்.
"கடுமையான உழைப்பாளியாக இவன் இருக்க வேண்டும். உழைத்த களைப்பில் இப்படி வெயிலிலும் நன்கு தூங்குகிறான்." என்று சொல்லிக் கொண்டே சென்றான்.
அடுத்ததாகத் திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான்.
"இரவில் கண் விழித்துத் திருடியிருப்பான் போல இருக்கிறது. அதனால்தான் இந்த நண்பகல் நேரத்தில் கூட அடித்துப் போட்டது போல இப்படித் தூங்குகிறான்" என்று சொல்லி விட்டுச் சென்றான்.
மூன்றாவதாகக் குடிகாரன் ஒருவன் அங்கே வந்தான்.
"காலையிலேயே இவன் நன்றாகக் குடித்து விட்டான் போலிருக்கிறது. அதுதான் குடி மயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்" என்று சொல்லிச் சென்றான்.
சிறிது நேரத்தில் துறவி ஒருவர் அந்த வழியாக வந்தார்.
"இந்த நண்பகலில் இப்படி உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும். வேறு யாரால் இத்தகையச் செயலைச் செய்ய முடியும்?" என்று அவனை வணங்கி விட்டுச் சென்றார்.
இப்படித்தான் ஒரே செயல் ஒவ்வொருவரின் பார்வையிலும் அவரவர் குணங்களுக்குத் தகுந்தபடி தோன்றுகிறது.