ஒரு நத்தை தினமும் இரை தேடச் செல்கையில் ஒரு கூட்டுப்புழுவை பார்க்கும். அந்தப் புழுவின் வால் மட்டும் துடிக்கும். ஆனால் வேறெங்கும் நகராது.
நத்தை அதனிடம், "ஏய் புழுவே, நானே மிக மெதுவாக ஊர்பவன். ஆனால் நீ என்னைக் காட்டிலும் மிகச் சோம்பேறியாய் இருக்கிறாயே" என்றது.
கூட்டுப்புழு அதற்குப் பதில் எதுவும் சொல்லவில்லை.
“என்னைப் பார்! எவ்வளவு அழகான ஓடுகள்! மெதுவாகப் போனாலும், தினமும் என் உணவை நானேத் தேடுகிறேன்... ஆபத்து வந்தால் உடலை ஓட்டுக்குள் சுருக்கிக் கொள்கிறேன். மழைக் காலங்களில் மரத்தில் வசிக்கிறேன்... நீ வாலை மட்டும் ஆட்டிக் கொண்டேக் கிடக்கிறாய் இது ஒரு பிழைப்பா?” என்று மேலும் சொன்னது.
கூட்டுப்புழு அமைதியாக இருந்தது.
சில வாரங்களுக்குப் பிறகு நத்தை அவ்வழியேச் செல்ல, "என்ன நத்தையே, என்னைப் பார்த்தாயா?" என்ற குரல் கேட்டது.
அங்கு ஒரு அழகிய வண்ணத்துப் பூச்சி இருந்தது.
நத்தை, “இது யார்? என்று யோசிக்கத் தொடங்கியது.
"நத்தையே, என்னைத் தெரியவில்லையா? நான் தான் கூட்டுப்புழுவாக இருந்தேன்" என்றது.
நத்தை ஆச்சரியப்பட வண்ணத்து பூச்சி தொடர்ந்து, "நீங்க பாவம், மெதுவா ஊர்ந்து போறதும், இந்த ஓட்டுக்குள்ள இருந்து உடம்பை நீட்டுறதும் சுருக்குறதும்... இதைத் தவிர உங்கள் வாழ்க்கையில பெரிதாக என்ன இருக்கு...? ஆனால், என்னைப் பாருங்க... எவ்வளவு சுதந்திரமாகச் சுற்றிப் பறக்கிறேன், அழகான பூக்களில் போய் உட்கார்கிறேன். தினமும் மலர்களிலிருந்து தேன் எடுத்துச் சாப்பிடுறேன், மகரந்த சேர்க்கை வழியாக இந்த பூமிக்குச் சேவை செய்கிறேன்... எல்லோரும் என்னைப் பார்த்து ரசிக்கும் படி அழகாக இருக்கிறேன். இப்ப சொல்லுங்க, யாருடைய பிழைப்பு உயார்வானது?” என்றது.
நத்தை தலை குனிந்தது.
அதனைக் கண்ட வண்ணத்துப்பூச்சி மகிழ்ச்சியோடு அங்கிருந்து பறந்து சென்றது.