தன் மூன்று பிள்ளைகளுக்கும் நல்ல பழக்கங்களைச் சொல்லித் தர வேண்டும் என்று விரும்பிய தந்தை, தினம்தோறும் அவர்களுக்கு நல்லது, கெட்டதுகளை எடுத்துச் சொல்லி வந்தார்.
ஒரு நாள் பெரிய உண்டியலை வாங்கி வந்த அவர், தனது பிள்ளைகளிடம் சொன்னார்:
"இனி மேல் யார் தவறு செய்தாலும், இந்த உண்டியலில் அபராதத் தொகையாக ஒரு ரூபாய் போட வேண்டும்''
பிள்ளைகளும் தவறு செய்யும் போதெல்லாம் உண்டியலில் ஒரு ரூபாயைப் போட்டு வந்தார்கள். மாத இறுதியில் உண்டியலில் உள்ள பணத்தை எண்ணும் போது அதில் 90 ரூபாய் இருந்தது.
தந்தைக்கோப் பயங்கரமாகக் கோபம் வந்தது.
"இந்த மாதம் சராசரியாக நாளொன்றுக்கு ஒவ்வொருவரும் ஒரு தவறு செய்திருக்கிறீர்கள். இனி மேல் தவறு செய்தால் இரண்டு ரூபாய் போட வேண்டும்'' என்று கோபத்துடன் சொன்னார்.
பிள்ளைகளும் அடுத்துத் தவறு செய்யும் போது இரண்டு ரூபாய் போட்டு வந்தார்கள்.
அந்த மாதக் கடைசியில் உண்டியலைத் திறந்து பார்த்தால் வெறும் இரண்டு ரூபாய் மட்டும் இருந்தது.
தந்தையால் அதை நம்ப முடியவில்லை.
"நேற்று கூட உண்டியலைத் தூக்கிப் பார்த்தேன். கனமாக இருந்தது. யார் இந்த இரண்டு ரூபாயைப் போட்டது?'' என்று கேட்டார் கோபமாக.
அவருடைய மூன்றாவது மகன் வந்து சொன்னான்:
"நீங்கள் சொன்னதைத்தான் அப்பா, நான் கடைப்பிடித்தேன். இன்று உண்டியலைத் திறந்து அதில் உள்ள பணத்தை எல்லாம் எடுத்துவிட்டேன். அந்தத் தவறுக்காக இரண்டு ரூபாயை உண்டியலில் போட்டிருக்கிறேன்”