காட்டில் சிங்கம் ஒன்று உணவு தேடி அலைந்தது. எந்த விலங்கும் அதன் கண்களில் படவில்லை.
பசியால் வாடிய அதன் கண்களுக்குப் புதர் அருகே இருந்த சிறு முயல் ஒன்று தெரிந்தது.
அந்த முயலைப் பிடித்த அது "இந்தக் குட்டி முயல் என் பசியைப் போக்குமா?" என்று நினைத்தது.
அப்பொழுது சிறிது தொலைவில் மான் ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது அதன் கண்களில் பட்டது. கொழுத்த மான் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில் முயலை விட்டு விட்டு மானிடம் ஓடியது அது.
சிங்கத்தைப் பார்த்து விட்ட மான் அங்கிருந்து ஒரே ஓட்டமாக ஓடத் துவங்கியது.
எவ்வளவோ முயன்றும் சிங்கத்தால் அதைப் பிடிக்க முடியவில்லை. சிங்கத்தின் பார்வையில் இருந்தே மான் மறைந்து விட்டது.
ஏமாற்றமடைந்த சிங்கம் அந்தக் குட்டி முயலையாவது பிடித்து உண்போம் என்று புதர் அருகே வந்தது.
அங்கே முயலையும் காணவில்லை. முயலும் தப்பித்து விட்டதை அறிந்து வருந்தியது.
இதைத்தான் கையில் இருப்பதை விட்டுவிட்டு தூரத்தில் தெரியும் ஒன்றிற்காக ஓடக் கூடாது என்கிறார்கள்.