ஒரு நாள், வாயில் உள்ள பற்கள் அனைத்தும் ஒன்று கூடி “நாம் எல்லோரும் கடப்பட்டு பொருள்களை சிரமத்தோடு கடித்து மெல்லுகிறோம். ஆனால், இந்த நாக்குக்கு ஒரு உழைப்பும் இல்லை, சுவைத்து, உண்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை. மேலும், நாம் பெரும்பான்மையானவர்கள். நாக்கோ சிறுபான்மை. அதனால், நாம் நம்முடைய வலிமையைக் காட்டுவதற்காக, நாக்கைக் கடித்துப் புண்ணாக்கி விடுவோம், அடுத்து அது என்ன செய்யும் என்று பார்க்கலாம்” என்று தீர்மானித்தன.
அதை அறிந்த நாக்கு, “அடே பற்களே! நாம் அனைவரும் மனித உடலில் உள்ள உறுப்புகள். ஒன்றுக்கொன்று உதவியுடனும், ஒத்துழைப்புடனும் இருந்து, செயல்படுவதே முறை. இதில் பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவரவர் கடமையை அவரவர் செய்வதே சிறப்பு. மீறி தகராறு செய்வீர்களானால், நான் என்ன செய்வேன் தெரியுமா? தெருவில் போய்க் கொண்டிருக்கும் ஒரு முரட்டு ஆளைப் பார்த்து, ‘அடே, முரடனே படவா!’ என்று சொல்லி விட்டு, நான் உள்ளே போய் விடுவேன்” அவன் வேகமாக வந்து, முகத்தில் பல குத்துகள் விடுவான். நீங்கள் எல்லோரும் ஆளுக்கு ஒரு பக்கமாக, உதிர்ந்து போய்விடுவீர்கள்” என்று எச்சரித்தது.
நாக்கு கூறியது உண்மைதான்! என்பதை பற்கள் உணர்ந்தன.
ஒருவருக்கு ஒருவர் உதவியும் ஒத்துழைப்பும் இல்லாமல் வாழமுடியாது என்பதை நாமும் இங்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.