ஒரு மரத்தில் இரண்டு தூக்கணாங் குருவிகள் கூடு கட்டிக் கொண்டு வாழ்ந்து கொண்டிருந்தன.
ஒரு நாள் கனமான மழை பெய்தது. கடுங்குளிர் அடிக்கத் துவங்கியது.
அந்த மரத்திற்கு குளிரில் நடுங்கியபடி ஒரு குரங்கு வந்து சேர்ந்தது.
குளிரில் நடுங்கியபடி இருந்த குரங்கைப் பார்த்து இரக்கப்பட்ட தூக்கணாங் குருவிகள்,"குரங்கே, உனக்குக் கை, கால்கள் இருந்தும் இப்படி மழை, குளிர், வெயில் போன்ற துன்பத்தை ஏன் அனுபவிக்க வேண்டும்?. நீ உனக்கென்று ஒரு வீடு கட்டிக் கொண்டால் இந்த துன்பமில்லாமல் இருக்கலாமே?" என்றது.
ஆனால் அதைக் கேட்டதும் அந்தக் குரங்குக்கு கோபம் வந்தது.
"வல்லவனான எனக்கு இந்த தூக்கணாங் குருவிகள் அறிவுரை சொல்வதா?" என்று எண்ணியபடி,"எனக்கு வீடு கட்டும் சக்தி இல்லை. ஆனால், நீங்கள் கட்டியிருக்கும் உங்கள் வீட்டை எப்படிப் பிரித்து எரிகிறேன் பார்? "
என்றபடி குருவிகளின் கூட்டைப் பிரித்தெறிந்தது.
பாவம் தூக்கணாங் குருவிகள் தகுதியில்லாத குரங்குக்கு சொன்ன அறிவுரையால் தங்கள் வீட்டை இழந்தது.
தகுதியில்லாத எவருக்கும் அறிவுரை சொன்னால் இழப்பு நமக்குத்தான் என்பதை நாம் முதலில் உணர வேண்டும்.