வேப்பமரம் ஒன்றின் கீழே அமர்ந்து ராமன் அழுது கொண்டிருந்தான்.
அதைக் கண்ட மரம், “தம்பி ஏன் அழறே” என்றது.
அதற்கு ராமன் எனக்கு யாரையுமேப் பிடிக்கவில்லை.
காலையில் எழுந்ததுமே, “முதலில் பல் தேய்த்துவிட்டு வா” என அம்மா அதட்டுகிறாள்.
பின் அப்பா, “காலை எழுந்ததும் படிப்பு. உன் பள்ளிப் பாடங்களைப் படி” என்று கண்டிக்கிறார்.
பின் குளித்து முடித்து, “பசிக்கலை” என்று சொன்னால், அம்மா திட்டிச் சாதம் சாப்பிடச் சொல்கிறாள்.
பள்ளிக்கு வந்தாலோ, “பாடம் படிக்கலைன்னும், பாடம் சொல்லிக் கொடுக்கும் போது வேடிக்கைப் பார்க்கக்கூடாது என்றும் டீச்சர் திட்டுறாங்க. எல்லாருமே நாள் முழுக்க என்னைத் திட்டிக்கிட்டேயிருக்காங்க. எனக்கு யாரையுமேப் பிடிக்கலை" என்றான் அழுது கொண்டே.
வேப்பமரம், "என் இலைகளை நீ சாப்பிட்டு இருக்காயா?" என்றது.
”ஓ... இலை மட்டுமா உன் இலை, குச்சி எல்லாமே ஒரே கசப்பு. சாப்பிட்டால் வாந்தி வந்துடும்” என்றான் ராமன்.
"ஆனால் பல வியாதிகளுக்கு நான் மருந்தாக இருக்கிறேன். நான் கசந்தாலும் பலர் வாழ்க்கையில் இனிமை உண்டாகக் காரணமாக இருந்திருக்கிறேன். அதுபோல், பெற்றோர், ஆசிரியர்கள் சொல்வது இப்போது உனக்குக் கசப்பாக இருக்கிறது. ஆனால், அந்தக் கசப்பை ஏற்று அதன்படி நடந்தால், பின் உன்னோட வாழ்க்கை இனிமையாக அமையும்” என்றது.
நாமும் நம்முடைய மூத்தவர்கள் சொல்லும் அறிவுரையை ஏற்று அதன்படி நடந்தால் அனைவராலும் விரும்பப்படுவது மட்டுமின்றி, மிகவும் சிறந்தவராகவும் ஆவோம்.