சுதாமன் என்ற சிறுவன் தன் அம்மாவிடம்,"அம்மா! இந்தப் பூச்சியின் முதுகில் சுருளாக ஏதோ இருக்கிறதே, இதன் பெயர் என்ன? இதை ஏன் சுமந்து கொண்டேத் திரிகிறது?'' என்றான்.
"மகனே! இதன் பெயர் நத்தை. கடவுள் இதற்குக் கொடுத்த சாபத்தால், இப்படி சுமையுடன் திரிகிறது'' என்ற அம்மா, அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.
ஒருமுறை எல்லா உயிரினங்களும் உலகத்தில் இருந்து புறப்பட்டு வந்து தன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆணையிட்டிருந்தார் கடவுள்.
அவரது ஆணைக்குக் கட்டுப்பட்டு, சாக்கடையில் நெளியும் சிறு கிருமிகள் கூட அவரை வந்து பார்த்து வணங்கிவிட்டுச் சென்றன.
கடவுள் சொன்ன நேரம் முடிந்த பிறகு, கடும் தாமதமாக வந்தது நத்தை.
"நத்தையே, ஏன் நீ தாமதமாக வந்ததற்கு என்ன காரணம்?'' என்று கேட்டார் கடவுள்.
"எனக்கு என் வீடு என்றால் உயிர். அங்கிருந்து எங்கு கிளம்புவதென்றாலும் மிகவும் வருத்தப்படுவேன். என் வீட்டை ஒப்பிடும் போது, உங்கள் உலகம் கூட எனக்குச் சாதாரணமானதுதான்'' என்றது.
அதைக் கேட்டக் கடவுள் கோபம் கொண்டார்.
"வீடே சுகமென நினைக்கும் நத்தையே! உனக்கு எது பிடித்ததோ, அதையே உனக்கு நிரந்தரமாகத் தருகிறேன். இனி, உன் வீட்டை நீ முதுகில் சுமந்து கொண்டேத் திரி'' என்று சொல்லிவிட்டார்.
அன்றிலிருந்து நத்தை முதுகில் சுமையுடன் திரிகிறது.