பட்டுப் புழு ஒன்று கூடு கட்ட நினைத்தது. பட்டு நூலைக் கொண்டு கூடு கட்டத் தொடங்கியது.
சிலந்தி ஒன்று இதைப் பார்த்தது. அதுவும் தன் வலையைப் பின்னத் தொடங்கியது.
விரைவில் வலையைப் பின்னி முடித்தது.
பட்டுப் புழுவோ தன் நூலை மெல்லச் சுற்றிக் கொண்டிருந்தது.
பெருமை கொண்ட சிலந்தி, “பட்டுப் புழுவே!என்னைப் பார்த்தாயா! எவ்வளவு பெரிய வலையை விரைவாகப் பின்னி முடித்து விட்டேன்.
ஆனால், நீ எனக்கு முன்னர் பின்னத் தொடங்கினாய். இன்னும் பின்னிக் கொண்டு இருக்கிறாய். எப்பொழுது முடிப்பாயோத் தெரியவில்லை” என்று கேலி செய்தது.
அதற்குப் பட்டுப் புழு, “உன் வலை எதற்குப் பயன்படுகிறது? சின்னஞ்சிறு பூச்சிகளைப் பிடிக்கத்தானே. மனிதர்கள் உன் வலையை அழுக்கு என்று அருவருப்புடன் அழிக்கிறார்கள். நான் பின்னும் நூலுக்கு எப்பொழுதும் மதிப்பு உண்டு. எல்லோரும் இதைக் பாதுகாப்பார்கள். அரசர்களும் அரசிகளும் செல்வர்களும் இதை அணிந்து மகிழ்வார்கள்.மெல்லச் செயல்பட்டாலும் நான் புகழுக்கு உரியதைச் செய்கிறேன்” என்று பதிலடி தந்தது.
அதைக் கேட்டுத் தலை கவிழ்ந்தது அந்தச் சிலந்தி.