ஒரு மலைச்சாரலில் பெண்கிளி ஒன்று வசித்து வந்தது. அதற்கு இரண்டு குஞ்சுகள் இருந்தன. ஒரு நாள் இரை தேடுவதற்காகத் தாய்க் கிளி வெளியே சென்றது.
அப்போது அங்கு வந்த வேடன் ஒருவன், கிளிக் குஞ்சுகள் இரண்டையும் கூடையில் வைத்து எடுத்துப் போனான். அவற்றுள், விதியின் விளைவால் ஒரு குஞ்சு கூடையிலிருந்து தவறிக் கீழே வழியில் விழுந்துவிட்டது.
அதை வேடன் கவனிக்கவில்லை.
வழியில் கிடந்த கிளிக் குஞ்சை ஒரு முனிவர் எடுத்துப் போய் ஆசிரமத்தில் வைத்து வளர்த்தார்.
வேடனும் தன்னிடம் இருந்த மற்றொரு குஞ்சைத் தன் வீட்டுக் குடிசையில் வைத்து வளர்த்தான்.
இது நடந்து, சில காலத்துக்குப் பிறகு அரசன் ஒருவன் அந்தக் காட்டுக்குக் குதிரை மீது வந்தான். கட்டுக்கு அடங்காமல் திரைகெட்டு ஓடியது குதிரை. அதனால் தன் பரிவாரத்தை விட்டுப் பிரிந்து அரசன் எங்கேயோ வந்துவிட்டான்.
அவன் வந்த இடத்தில் வேடன் வாழும் குடிசை இருந்தது.
குதிரை மீது ஒருவன் வருவதை வேடன் வளர்த்த கிளி கவனித்து விட்டது. “ஐயா! யாரோ ஒரு மனிதன் குதிரை மீது வருகிறான். அவனைப் பிடித்துக் கட்டுங்கள்; கொல்லுங்கள்; அடியுங்கள்” என்று உரத்த குரலில் கூவியது.
இதைக் கேட்ட அரசன் பயந்து போனான்.
குதிரையை வேகமாக வேறு பக்கம் தட்டிவிட்டான். அது முனிவர் வாழும் ஆசிரமத்துக்குப் போய்ச் சேர்ந்தது.
கூண்டிலிருந்தபடியே அந்தக் கிளி அரசன் வருவதைக் கவனித்து விட்டது.
“அரசே! வாருங்கள், வாருங்கள்; தங்களுக்கு நல்வரவு; தயவுசெய்து இந்த ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறுங்கள்; குளிர்ந்த நீரைப் பருகுங்கள்; சுவையுள்ள பழங்களைச் சாப்பிடுங்கள்! முனிவர்களே! அரசரை உபசரிப்பதற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். பாதங்களைக் கழுவிக் கொள்ள நீர் கொடுங்கள். மர நிழலில் இளைப்பாற ஏற்பாடு செய்யுங்கள். வேண்டிய பணிவிடைகளைச் செய்யுங்கள்” என்று உரக்கக் கூறியது.
இதைக் கேட்டதும் அரசன் அளவற்ற ஆச்சரியம் அடைந்தான்.
“இந்த இரண்டு கிளிகளுக்குமிடையே இத்தகைய வேறுபாடு இருக்கக் காரணம் என்ன?” என்று சிந்தித்தான்.
அவன் கிளியைப் பார்த்து, “இதேக் காட்டில் இன்னொரு கிளியைப் பார்த்தேன். என்னைப் பார்த்ததும் குத்து, வெட்டு, கொல்லு என்று அது கூறிற்று. அது அப்படிப் பேசக் காரணம் என்ன?” என்று கேட்டான்.
தங்கள் வரலாற்றைக் கிளி அரசனுக்கு எடுத்துக் கூறிற்று.
“அரசரே! நாங்கள் இருவரும் ஒரே தாய் வயிற்றில் பிறந்தவர்கள். என்னை முனிவர் வளர்த்தார். என் தம்பியை வேடர் வளர்த்தார். எங்கள் வளர்ப்பும், பயிற்சியுமே இந்த வேறுபாட்டுக்குக் காரணம்” என்று விளக்கியது கிளி.
பழக்க வழக்கங்களினாலும் சேர்க்கையினாலும் ஒருவனுக்குக் குணங்கள் ஏற்படுகின்றன. பிறப்பினாலோ, பரம்பரைப் பெருமையினாலோ அல்ல என்பதையே இந்தப் பஞ்சதந்திரக் கதை விளக்குகிறது.