துர்வாச முனிவர் ஏராளமான நூல்களைப் படித்தார்.
தாம் படித்து முடித்த நூல்களை எல்லாம் பார்த்தார். தன்னைப் போல யாரும் இவ்வளவு நூல்களைப் படித்திருக்க முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
தமது கல்விப் பெருமையைச் சிவபெருமானிடம் சொல்ல வேண்டும் என்று அவர் நினைத்தார்.
படித்த நூல்களை எல்லாம் ஏழு வண்டிகளில் ஏற்றினார். தாமும் வண்டிகளோடு புறப்பட்டார்.
அப்போது அங்கே நாரதர் வந்தார்: "துர்வாசரே! என்ன வண்டிகள் நிறைய இவ்வளவு புத்தகங்கள்? எங்கேச் செல்கிறீர்கள்?" என்று கேட்டார்.
"நாரதரே! இவை எல்லாம் நான் படித்து முடித்த புத்தகங்கள். இது வரையில் உலகில் யாரும் இவ்வளவு புத்தகங்களைப் படித்திருக்க முடியாது. என் கல்விச் சிறப்பைக் காட்டுவதற்காக இவற்றைச் சிவபெருமானிடம் கொண்டு செல்கிறேன்" என்று துர்வாச முனிவர் பெருமையுடன் கூறினார்.
இதைக் கேட்ட நாரதர் சிரித்தார். “நாரதரே! ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றார் அவர்.
"முனிவரே! உங்கள் செயலைப் பார்த்ததும் எனக்குக் கழுதையின் கதை நினைவுக்கு வந்தது.
அதனால் சிரித்தேன்" என்றார் நாரதர்.
"அது என்ன கதை?" என்று கோபத்துடன் துர்வாச முனிவர் கேட்டார்.
"ஒரு சமயம் ஒரு கழுதை தன் முதுகில் சந்தனக் கட்டைகளைச் சுமந்து வந்தது. 'ஐயோ! எவ்வளவு சுமை? இதை எவ்வளவு தூரம் தூக்கிச் செல்வது' என்று அது வருந்தியது.
சந்தனக் கட்டையின் நறுமணம் பற்றிய உணர்வே அதற்கு இல்லை.
"அதே போல் சிலர் புத்தக மூட்டைகளைப் பெருஞ்சுமையாகக் கருதுவார்கள். அந்தப் புத்தகங்களில் உள்ள ஆழ்ந்த பொருளை உணர மாட்டார்கள். முனிவரே! நீங்களும் அந்த நிலையில் இருப்பதைப் பார்த்தேன், எனக்குச் சிரிப்புத் தாங்கவில்லை” என்றார் நாரதர்.
"என்னை மன்னித்துவிடுங்கள் நாரதரே! உங்களால் நான் இன்று நல்லறிவு பெற்றேன். இனி வீண்பெருமை கொள்ள மாட்டேன்” என்றார் துர்வாசர்.