சுதீட்சணர் அதிகாலையில் நீராடிவிட்டு மரவுரியைப் பலாச (புரச) மரத்தில் தொங்கவிட்டு, உலர்ந்த மரவுரி அணிந்து, சாளக்கிராம பீடத்தை முன்னால் எடுத்து வைத்துக் கொண்டு பூஜைக்கு அமர்ந்தார்.
ஆனால், ‘இது என்ன! பீடம் காலியாக அல்லவா இருக்கிறது? இரண்டு சாளக்கிராமங்களையும் காணவில்லையே! இது என்ன அதிசயம்?' என்று அவர் மனம் சிந்தனையில் ஆழ்ந்தது.
ஆசிரமவாசிகளின் மனம் திருடுவது என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆமையின் அவயவங்களைப் போலச் சுருங்கிவிடும். ஆதலால், தம்மைச் சூழ்ந்துள்ள பிரம்மஞானிகளிடம் தமது சாளக்கிராமத்தைப் பற்றிக் கேட்கவே சுதீட்சணருக்கு நடுக்கமாக இருந்தது.
சாளக்கிராமத்தைக் காணாதது முதல் அவருக்கு ஒன்றும் ஓடவில்லை. கிழங்குகள் பறிக்கவோ, கனிகள் கொய்யவோ, புஷ்பங்கள் ஆயவோ அவர் மனம் ஓடவில்லை.
நாட்கள் சென்றன. வெயிற்காலம் வந்தது. ஏரியில் நீர் வற்றி விட்டது. நடுவில் கிணறு போன்று இருக்கும் பள்ளத்திலிருந்தே தண்ணீர் எடுக்க வேண்டி வந்தது.
ஒரு நாள் மாலை கமுகம் பாளையில் கொடியை முடிந்து அதில் தண்ணீர் எடுத்தபோது சுதீட்சணருக்குக் கனத்தது. மெதுவாக எடுத்துப் பார்த்தால் அவருடைய இரண்டு சாளக்கிராமங்களும் அதில் காட்சியளித்தன.
அவற்றைக் கண்டதும் அவரது மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அவற்றை ஆசிரமத்துக்குக் கொண்டு வந்து வழக்கப்படி முன்பு போல் பூஜை செய்யத் துவங்கினார்.
ஒரு நாள் பூஜையறையில் சலசலவென்று பாண்டங்கள் உருளும் சப்தம் கேட்டது. சுதீட்சணர் ஓடிச் சென்று பார்த்தபோது, தமது சாளக்கிராமங்களை இரண்டு குரங்குகள் தலைக்கு ஒன்றாக எடுத்துச் செல்வதைக் கண்டார்.
அவற்றின் பின்னால் ஓடினார்.
அவை அதை ஏரியில் எறிந்துவிட்டு ஓடின. பிறகு அதை எப்படியோ ஒருவிதமாக எடுத்து வந்தார்.
இவ்விதம் பல தடவை நிகழவே அவருக்குக் கோபம் வந்துவிட்டது. என்றாலும் அதே சமயம், குரங்குகளுக்குச் சாபம் கொடுத்து என்ன பயன் என்ற எண்ணமும் அவருக்குத் தோன்றியது.
சிறிது யோசித்துவிட்டு, “இனி நீங்கள் எதைத் தண்ணீரில் எறிந்தாலும் அவை மிதக்கக் கடவன!" என்று அந்த இரண்டு குரங்குகளுக்கும் சாபம் கொடுத்தார். அது முதல் அவருடைய சாளக்கிரமங்கள் அந்தக் குரங்குகளினால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும் அவர் அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாயின.
அவ்விதம் சுதீட்சண முனிவரால் சபிக்கப்பட்ட அந்தக் குரங்குகள் நமக்குப் பழக்கமானவைதாம். ராமாயணத்தில் வரும் நளன், நீலன் என்ற குரங்குகள்தாம் அவை.
இந்த விஷயம் பிரம்மஞானியான ஆஞ்சனேயருக்குத் தெரியாமலா இருக்கும்? ஆஞ்சனேயர் சொல்ல, பிற்காலத்தில் அதன்படியே சேது சமைத்த போது ராமபிரான் எல்லாக் கற்களையும் நளனும் நீலனும் எடுத்தே அணையில் வைக்க வேண்டுமென்று கட்டளையிட்டார்.
அதனால் பெரிய பெரிய பாறைகளும் தண்ணீரில் அமிழ்ந்து போகாமல் மிதந்து எளிதில் பெரிய அணையாயின.
இவ்விதம் மகாத்மா சுதீட்சணரின் சாபம் நன்மையாகவே முடிந்தது.