ஆயுதசாலைக்கு வெளியே ஒரே கூட்டம். அமைச்சர்களும் தளபதிகளும் புடை சூழப் பெரியவர்கள் பீஷ்மர், துரோணர், விதுரர் என்று அனைவரும் குழுமியிருந்தனர்.
ஒரு புறம் துரியோதனாதியரும் மறுபுறம் பாண்டவரும் நின்றுகொண்டிருந்தனர்.
துரோணர் ஒரு குரல் கொடுத்ததும் சிறுவர் அனைவரும் தங்கள் தங்கள் வில்களை நாண் ஏற்றினார்கள். அவர்களுடைய குறிக்கு இலக்காக இருந்தது ஒரு சிறிய பறவை. நூறு கஜ தூரத்தில் இருந்த ஒரு மரத்தின் உச்சியில் அது உட்கார்ந்து கொண்டிருந்தது.
ஒவ்வொருவரையும் துரோணர் ஒரே ஒரு கேள்வியைத்தான் கேட்டார் : ''உன் கண்கள் காண்பது என்ன?''
தர்மர், பீமன், அர்ஜுனன், துரியோதனன், கர்ணன் இவர்கள் ஐந்து பேரைத் தவிர மற்ற யாவரும் சொன்ன ஒரே பதில், “இங்கு இருப்பவர்கள், அந்த மரம், பறவை, எல்லாமேத் தெரிகின்றன” என்பதுதான்.
முகம் சுளித்துத் தலையசைத்தார் துரோணர். "கவனம் பல புறங்களிலும் சிதறுகிறது. பயனில்லை'' என்றார் ஆச்சாரியர்.
அடுத்துத் தர்மர் சொன்னார்: ''மரம், கிளைகள், பறவை முதலியவற்றைக் காண்கிறேன்.”
"ஊஹும், போதாது.” மீண்டும் துரோணர் தலையசைத்தார். அடுத்தவன் பீமன். அவன், "கிளையையும் பறவையையும் காண்கிறேன்'' என்றான்.
“இதுவும் காணாது. துரியோதனா, நீ சொல்'' என்றார் துரோணர். “நானும் கிளையையும் பறவையையும்தான் காண்கிறேன்'' என்றான் அவன். ''கர்ணா, நீ?''
பறவையை மட்டும் பார்க்கிறேன்.”
“பரவாயில்லை. பறவையின் நிறம் என்ன?''
“கறுப்பு.”
துரோணர் தலையை ஆட்டினார். "உன் குறி பரவாயில்லை. ஆனால், இன்னும் சற்றுத் தேற வேண்டும். அர்ஜுனா, நீ?''
பறவையை மட்டும் பார்க்கிறேன்.''
''அதன் நிறம் என்ன?''
“தெரியவில்லை குருநாதா! ஏனென்றால் என் கண்ணுக்குத் தெரிவது அந்தப் பறவையின் தலை மட்டுந்தான்" என்று அர்ஜுனன் கூறியதும் துரோணர் மகிழ்ந்தார்.
அவர் கையை உயர்த்தியதும் அனைவரும் அம்புகளை விடுத்தனர்.
ஆனால், இரண்டே இரண்டு அம்புகள் மட்டுமே பறவை மீது தைத்திருந்தன. ஓர் அம்பு கர்ணனுடையது. அது இறக்கையில் தைத்திருந்தது. மறு அம்பு அர்ஜுனனுடையது; அது பறவையின் சிரத்தைக் கொய்து விட்டிருந்தது.
அர்ஜுனனின் திறமையை அனைவரும் மெச்சினார்கள். வில்வித்தையில் அவன் முதலாவதாகத் தேறியிருந்தான்!